சர்வதேச ஆதரவுடனே அரசுடன் இனிப் பேச்சு! கூறுகின்றார் சம்பந்தன்
தேர்தலுக்குப் பின்னர் அமையும் புதிய அரசுடன் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடனும் அனைவரதும் ஆலோசனைகளையும் பெற்றே பேச்சுவார்த்தையை நடத்துவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காகக் கொழும்பிலிருந்து சில தினங்களுக்கு முன்னர் திருகோணமலை சென்றுள்ள இரா.சம்பந்தன், அங்கு நாள்தோறும் மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகின்றார்.
அந்தவகையில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் காணப்பட வேண்டும். அதில் அரசியல் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட்டே தீர வேண்டும் என்பதில் கூட்டமைப்பு உறுதியாக நிற்கின்றது என கூறினார்.
அதற்காகப் பொதுத்தேர்தலின் பின்னர் அமையவுள்ள புதிய அரசுடன் பேச்சு நடத்த நாம் தயாராக இருக்கின்றோம் என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
நாம் பலமான அணியுடன் நாடாளுமன்றம் சென்றால்தான் அரசுடன் காத்திரமான பேச்சுக்களை மேற்கொள்ள முடியும் என்றும் எனவே, இம்முறை தேர்தலில் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவம் கடந்த முறையையும் விட அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அந்தப் புனிதமான கடமையை எமது மக்கள் தங்கள் வாக்குகள் மூலமாகத் தவறாது செய்ய வேண்டும் என்றும் எமது மக்களின் ஒவ்வொரு வாக்கும் பெறுமதியானது என்றும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.
இதேவேளை புதிய அரசுடன் நாம் பேச்சு நடத்துவதற்கு முன்னர் அது தொடர்பில் சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெறுவோம் என தெரிவித்துள்ள இரா.சம்பந்தன் அனைவருடைய ஆலோசனைகளையும் பெற்று அதற்கமையவே பேச்சைத் தொடர்வோம் என்றும் கடந்தகால வரலாறுகளை நாம் மறக்கமாட்டோம் என்றும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை