இரண்டாம் கட்ட கொரோனா அச்சுறுத்தல்: அரசாங்கம் மீது ரணில் குற்றச்சாட்டு
இரண்டாம் கட்ட கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்தும், இலங்கை அரசாங்கம் இதுதொடர்பான எந்தவொரு வேலைத்திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை என ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சிறிகொத்தவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தாக்கம் இலங்கையில் ஏற்பட்டபோது, அரசாங்கம் அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை சரியானது என்பதால், நாமும் அதற்கு அன்று ஒத்துழைப்பினை வழங்கினோம். இதனால், நாம் அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துக் கொண்டதாக சிலர் எம்மை விமர்சித்தார்கள்.
நாம் இதுதொடர்பாக எல்லாம் கவலையடையப் போவதில்லை. மக்களின் வாழ்க்கை தொடர்பாகத் தான் இவ்வேளையில் சிந்திக்க வேண்டும்.
இன்று உலக சுகாதார ஸ்தாபனம், இரண்டாம் கட்ட கொரோனா அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளது. நாம் இதுதொடர்பாக சிந்தித்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆனால், அரசாங்கமானது இதுவரை இதுதொடர்பான உரிய வேலைத்திட்டமொன்றை வகுக்கவில்லை. கடந்த காலங்களில் மக்கள் எம்மை புறக்கணித்தார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.
எவ்வாறாயினும், ஜனாநாயகத்தை கைவிட்டு, சர்வாதிகாரப் போக்குக்கு நாட்டை கொண்டுச் செல்ல நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
நாம் அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க தான் பலத்தைக் கோருகிறோமே ஒழிய, கட்சிக் காரியாலங்களை விமர்சிக்க அல்ல. அத்துடன் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம். மக்களுடன் தான் ஒப்பந்தம் செய்துக் கொண்டுள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்
கருத்துக்களேதுமில்லை