புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கியமைக்கான காரணத்தை வெளியிட்டது ஐ.தே.க
இந்திய இராணுவத்தினரைத் தோற்கடிக்கும் நோக்கிலேயே விடுதலைப்புலிகள் அமைப்புக்கு முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் ஆயுதங்கள் வழங்கப்பட்டன என ஐ.தே.க.வின் முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அரசியல் அரங்குகளில் வெவ்வேறு விதமாக பேசப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் குருநாகல் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட அவர், அதற்கு பதிலளிக்கும் வகையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மக்கள் சந்திப்பில் காமினி ஜயவிக்ரம பெரேரா மேலும் கூறியுள்ளதாவது, “ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக பதவியேற்ற காலத்தில் இலங்கையில் இருந்து இந்திய இராணுவத்தினரை வெளியேறுமாறு நாளொன்றை வழங்கினார்.
மேலும் இந்திய இராணுவமானது, இலங்கையின் தேசிய கொடிக்கு பதிலாக, வடக்கு- கிழக்குக்கு என தனியான கொடியை அறிமுகப்படுத்துமாறு வரதராஜ பெருமாளுக்கு கோரிக்கை விடுத்தது.
இத்தகைய செயற்பாட்டுக்கு ஜனாதிபதி பிரேமதாச எதிர்ப்பை தெரிவித்ததுடன் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்” என குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை