வடக்கையும் தெற்கையும் இணைக்கும் உறவுப்பாலமாக செயற்படுவேன் – கேணல் ரட்ணபிரிய
வடக்கையும் தெற்கையும் இணைக்க கூடிய உறவுப்பாலமாக நான் செயற்படுவதுடன் எந்த சந்தர்ப்பத்திலும் வன்னி மக்களுடன் நான் இருப்பேன் என பொதுஐன பெரமுனவின் வன்னி மாவட்ட வேட்பாளர் கேணல் ரட்ணபிரிய பந்து தெரிவித்தார்.
வவுனியா குருமன்காட்டில் பொதுஐன பெரமுனவின் கட்சிகாரியாலத்தை இன்று (திங்கட்கிழமை) திறந்துவைத்துவிட்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “ வடக்கையும் தெற்கையும் இணைக்க கூடிய உறவுப்பாலமாக நான் செயற்படுவேன். எந்த சந்தர்ப்பத்திலும் வன்னி மக்களுடன் நான் இருப்பேன் அதில் எதுவித மாற்றமும் இல்லை. வடக்கில் அரசியல் புரட்சியிலே மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்துவோம். குறிப்பாக இரண்டிற்கு மேற்பட்ட ஆசனங்களை எமது கட்சி பெற்றுக்கொள்ளும்.
வடக்கு மக்களின் வேலைவாய்ப்பு விடயங்கள் தொடர்பாக நல்ல தீர்மானம் ஒன்றை எடுக்கவேண்டும்.
அத்துடன் வடக்கில் தனியார் நிறுவனங்களை ஆரம்பிப்பது தொடர்பாக கவனம் செலுத்தவேண்டும். இங்கிருக்கும் இளைஞர்கள் தமது குடும்பங்களை பிரிந்து கொழும்பில் சென்று தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிற்கு இப்பகுதியிலே தொழிலை செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்துகொடுக்கப்படவேண்டும்.
வேறுபகுதிகளை சேர்ந்தவர்களிற்கு இங்கு நியமனம் வழங்கும் செயற்பாடுகளிற்கு இனிவரும் காலங்களில் முற்றுப்புள்ளிவைக்கப்படும். எனினும் தகுதிஅற்றவர்கள் வடபகுதியில் இருப்பார்களானால் வெளிப்பிரதேசங்களில் உள்ள தகுதியுடையவர்களை அப்பதவிகளில் நியமிக்கப்படுவர்.
தமிழ் மக்களின் வாக்குகள் தேவையில்லை என்று வீரவன்ச தெரிவித்ததாக கூறும் கருத்தானது முற்றிலும் பொய்யானது. தங்களது அரசியல் இலாபங்களுக்காக சில ஊடகங்களை பயன்படுத்தி இப்படியான தவறான கருத்துக்களை சிலர் பரப்பி வருகின்றனர்.
அப்படி அவர் நினைத்திருந்தால் காங்கேசன்துறை, ஒட்டிசுட்டான் போன்ற பகுதிகளிலே முன்னெடுக்கப்படும் தொழிற்சாலைகளை அபிவிருத்தி செய்து மக்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க கூடிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய அவசியமில்லை. இது இனங்களிற்கிடையே பிளவுகளை ஏற்படுத்துபவர்களின் செயற்பாடு” என்றார்.
கருத்துக்களேதுமில்லை