யாழ்.மகளிர் அணி விமலாவை உடன் கட்சியில் இடைநிறுத்துக! தலைவர் மாவை செயலருக்கு அறிவுறுத்தல்

இலங்கைத் தமிழரசுக் கட்சி மகளிர் அணி யாழ்.மாவட்ட செயலாளர் என்று தெரிவித்து யாழ்.ஊடக அமையத்தில் ஊடகச் சந்திப்பு நடத்திய விமலேஸ்வரி, மேற்படி ஊடக சந்திப்பு தொடர்பில் கட்சித் தலைவராகிய தனக்கோ அல்லது பொதுச் செயலாளராகிய துரைராஜசிங்கத்துக்கோ எந்த அறிவுறுத்தலும் வழங்காமல் தன்னிச்சையாக – உண்மைக்குப் புறம்பாக – வதந்திகளைப் பரப்பியுள்ளார்கள். கட்சிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய விமலேஸ்வரியையும் அவரோடு ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட ஏனைய நால்வரையும் உடன் கட்சியிலிருந்து நீக்குக.

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா, தமிழரசுக் கட்சி செயலாளர் கி.துரைராஜசிங்கத்துக்கு எழுத்துமூலம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அவரது அறிவுறுத்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு:

நேற்று முன்தினம் 27/06/2020 அன்று தமிழரசுக் கட்சி மகளிர் அணிச் செயலாளர் என்று கூறப்பட்ட விமலேஸ்வரி சிறீகாந்தரூபன் மற்றும் நால்வர் யாழ்ப்பாணம் ஊடக மையத்துக்குச் சென்று தெரிவித்த கருத்துக்கள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இக்கடிதத்தை எழுதுகிறேன். நேற்று 28/06 காலை தாங்களும் தொலைபேசி மூலம் இவ்விடயங்கள் தொடர்பில் பேசியிருந்தீர்கள்.

      1.”வடக்கு கிழக்கு பெண்களின் வாழ்வாதாரத்தை மீட்க என தமிழரசுக் கட்சிக்குக் கொடுத்த 212 மில்லியன் ரூபா எங்கே?’ என்று 28/6/20 ஊடகங்களில் வெளிவந்த செய்திகள்;

  1. “சிறீதரன், சுமந்திரனை தேர்தலில் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்” என்ற செய்திகள் (மேற்படி 28/06 வெளிவந்த பத்திரிகைச் செய்திகள்)

(அ). இச் செய்திகள் தொடர்பில் நேற்றும் இன்றும் தமிழரசு மகளிர் அணித் தலைவர் திருமதி. மதனி, செயலாளர் திருமதி வளர்மதி ஆகியோர் தொலைபேசி மூலம் முறையிட்டுள்ளனர்.

(ஆ) நேற்று (28/06) திரு.எம்.ஏ.சுமந்திரன் வேட்பாளர், மற்றும் திரு.சி.சிறிதரன்

வேட்பாளர் இருவரும் மேற்படி செய்திகள் பற்றி என்னிடம் முறையிட்டுள்ளனர்.

இவ்வாறு முறையிடப்பட்ட செய்திகளை யாழ்.ஊடகத்திற்குத் தாமாகவே, தன்னிச்சையாகவே திருமதி .விமலேஸ்வரியும் ஏனைய நால்வரும் சென்று வெளியிட்டுள்ளனர். இச் செய்திகள் தொடர்பில் கட்சித் தலைமைக்கோ அன்றி கட்சித் தலைவருக்கோ, பொதுச் செயலாளருக்கோ நேரடியாகவோ, எழுத்து மூலமாகவேனும் தெரிவிக்கவில்லை.

வெளியிட்டுள்ள செய்திகள் குறிப்பாக நிதி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இறுதியாக நடைபெற்ற தமிழரசுக் கட்சி மத்திய செயற்குழுவில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்குக் கட்சியின் பொருளாளர், “அவ்வாறான நிதி வரவு பற்றி கட்சியின் வங்கிக் கணக்கில் வரவே இல்லை. குறிப்பிடப்பட்ட நிதி தொடர்பிலும் எந்த விபரங்களும் தனக்கோ, கட்சிக்கோ எதுவும் தெரியாது” என்று பதிலளித்துள்ளார். மத்திய செயற்குழு அப்பதிலை ஏற்றுக் கொண்டது.

பத்திரிகைச் செய்தி வெளியிட்டவர்கள் செய்திகளில் குறிப்பிட்டவாறு, திருகோணமலை தமிழரசுக் கட்சியின் பொறுப்பிலுள்ளவரும், தற்போது தேர்தல் வேட்பாளரும், முன்பு கனடாவிலிருந்தவருமான திரு. குகதாஸிடமிருந்தோ, திரு.சுமந்திரனிடமிருந்தோ எந்த தகவலும் கட்சிக்குத் தரப்படவில்லை . இவ்விடயம் தொடர்பில் பத்திரிகைக்கு இச் செய்திகள் வெளியிட்டவர்களும் எந்த ஆதாரத்தையோ, ஆவணத்தையோ, முறைப்பாட்டையோ கட்சித் தலைமையிடம் தெரிவித்திருக்கவில்லை. இவ்விடயம் தொடர்பில் பொதுச் செயலாளர் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு அறிவித்து கனடாவில் இவ்வாறு தெரிவிக்கப்படும் நிதி பற்றி அங்குள்ள எமது கூட்டமைப்புக் கிளை மூலம் விசாரனை நடத்த வேண்டுமென்று தங்களிடம் நினைவூட்டியிருக்கிறேன். இது பற்றி எந்த ஒரு ஆதாரமோ, ஆவணமோ, தொடர்பான அறிக்கையோ இதுவரை கிடைக்கவில்லை.

27/06 ஊடகத்துக்குச் சென்ற திருமதி. விமலேஸ்வரி மற்றும் நால்வரும் அதுவும் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள காலத்தில் கட்சிக்கு அபகீர்த்தியையும், வேட்பாளர்களுக்குப் பங்கமேற்படும் வகையிலும் திட்டமிட்டு ஊடகங்களுக்குச் செய்தி பரப்பியது பாரதூரமான விடயங்களாகும். உண்மைக்கு மாறான செய்திகளுமாகும். இவ்விடயம் தொடர்பில் கட்சியும் ஒரு விசாரணை நடாத்தி மக்களுக்குத தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறான ஆதாரமற்ற கட்சிக்குப் பங்கமேற்படுத்தக் கூடிய செய்திகளைப் பரப்பியவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்.

2020 மார்ச் பகுதியில் பொதுத் தேர்தல் வேட்பு மனுக்கள் தயாரித்த காலத்தில் ஊடக மையத்தில் வெளியிட்ட செய்திகளுக்காக திருமதி .விமலேஸ்வரி, திருமதி. மிதிலைச்செல்வி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வற்புறுத்தல்கள் இருந்தபோதும் அவ்வாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிட வேண்டும்.

அடுத்து இப் பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாக திரு.சுமந்திரன், திரு.சிறீதரனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள், அறிவிப்புக்கள் கட்சிக்கும், வேட்பாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவைகளாகும். கட்சித் தலைமைக்குத் தெரிவிக்காமல் இத்தகைய செய்திகளைப் பரப்பியமைக்கு எதிராகச் சம்பந்தப்பட்டவர்கள் மீது கட்சித் தலைமை, “உடன் கட்சியிலிருந்து இடைநிறுத்துவது” முதலான ஒழுங்கு நடவடிக்கைகளை உடன் எடுக்க வேண்டும்.

எனவே இக் குற்றச்சாட்டுக்கள் பற்றியும், குற்றஞ்சாட்டியவர்கள் பற்றியும் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு அறிவித்து ஒரு வாரத்தில் அறிக்கை பெற்று பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகளிர் அமைப்பையும் கூட்டி உடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையையும் எடுத்தாக வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அண்மைக்காலங்களில் தமிழரசுக் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியவர்கள், ஒழுங்கு நவடிக்கைக் கோவையின் படி விதிமுறைகளையும் மீறியவர்கள் மீதும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்து இவ்வாறான செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன். – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.