ஐ.நா. அதிநவீன உபகரணங்களுடன் எங்கள் நிலத்தை பரிசோதித்தாலே உண்மை தெரியவரும்- சவேந்திர சில்வாவின் கருத்து குறித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், அதிநவீன உபகரணங்களுடன் எங்கள் நிலத்தில் உள்ள எஞ்சியவற்றை பரிசோதித்தாலே உண்மையைக் கண்டறிய முடியும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இரணுவத்தளபதி சவேந்திர சில்வா அண்மையில் தெரிவித்திருந்த கருத்துத் தொடர்பாக பதிலளிக்கும் வகையில் வவுனியாவில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், “இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா ஒரு அறிக்கையை வெளியிட்டார். தமிழர்கள் எந்தவொரு உரிமை சார் போராட்டத்தையும் செய்யக்கூடாது என்று அவர் சொல்கிறார். ஏனெனில் எல்லாம் போய்விட்டது.
காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் புலிகளால் கொல்லப்பட்டனர் என்று சிங்களம் மிகப் பெரிய பொய்யைக் கூறுகின்றது. சிங்களவரின் அறிக்கையின் உண்மையை நாம் அறிய ஒரே வழி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை, அவர்களின் அதிநவீன உபகரணங்களுடன் எங்கள் நிலத்தில் உள்ள எஞ்சியவற்றை பரிசோதிக்க அழைப்பதன் மூலமே அந்த உண்மையை அறியலாம்.
இந்த புதிய அரசியல் சாசனம் என்பது தமிழர்களுக்கு ஒரு அடிமை சாசனம்தான் என்பதை சவேந்திர சில்வா இப்போது சூளுரைக்கிறார்.
இதேவேளை, சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ள விரும்பாத எந்தவொரு தீர்வையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றுத்தலும் என்று தமிழர்கள் நினைத்தால், அவர்கள் தங்களைத் தாங்களே கேலி செய்கிறார்கள் என்றே அர்த்தமாகும்.
எனவே, இளமமையான, விலை போகாத, ஆற்றல் மிக்க, படித்த, வெளிப்படையான, இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களைத் தீர்ப்பது குறித்து அறிவுள்ளவர்களை நாம் கண்டுபிடிக்க வேண்டும். இந்தத் தேர்தலில் நாம் யாரை ஆதரவளிக்க வேண்டும் என்பது குறித்து தமிழ் தாய்மார்களுக்கும், தமிழ் மக்களுக்கும் தெரிவிப்போம்” என்று தெரிவித்தனர்.
கருத்துக்களேதுமில்லை