எம்.சி.சி மீளாய்வு அறிக்கை குறித்து பொம்பியோவுக்கு விளக்கமளித்தார் அமைச்சர் தினேஷ்
மிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் குறித்த மீளாய்வு அறிக்கை தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவிற்கு விளக்கமளித்துள்ளார்.
நேற்று (திங்கட்கிழமை) மைக் பொம்பியோ மற்றும் தினேஷ் குணவர்த்தன ஆகியோர் தொலைபேசி மூலம் இரு நாடுகளுக்கிடையிலான பலதரப்பட்ட விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்போது கொரோனா வைரஸிற்கு எதிரான நடவடிக்கைக்காக சுவாசக் கருவிகளை இலங்கைக்கு வழங்குதல், இலங்கையிலிருந்து பாதுகாப்பு உபகரணங்களை வழங்குதல் உள்ளிட்ட 5.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவை தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை எம்.சி.சியின் மீளாய்வு அறிக்கை, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்கள் குறித்தும் விளக்கமளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் மீள்குடியேற்ற செயன்முறைகளுக்கு அளித்த ஆதரவுக்கு அமெரிக்காவிற்கு நன்றியையும் தெரிவித்தார்.
அத்தோடு ஜூலை 4 ஆம் திகதி வரவிருக்கும் அமெரிக்க சுதந்திர தினத்திற்கான இலங்கை சார்பான வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை