தமிழ் மக்களை பிரித்து வாக்குகளை பெற கூட்டமைப்பு முயற்சி – அரவிந்தன் குற்றச்சாட்டு
தமிழ் மக்களை சாதி , மத ரீதியாக பிரித்து வாக்குகளை பெற முயலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது அத்தகைய செயற்பாட்டை உடனடியாக கைவிட வேண்டும் என தமிழர் விடுதலை கூட்டணியின் உப தலைவரும் யாழ். மாவட்ட வேட்பாளருமான சண்முகராஜா அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் போதாமையாக உள்ளதாக நாம் குற்றம் சாட்டி வரும் நிலையில் , தற்போது இருக்கும் கொஞ்ச அதிகாரங்களை கூட பறிக்க முயல்கின்றனர். இதற்கு தமிழர் விடுதலை கூட்டணி வன்மையாக கண்டிக்கிறோம்
இந்த நிலையில் தமிழ் மக்களை கூறு கூறாக பிரித்து தமிழ்மக்களை சீரழிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது முயல்கின்றது. தாம் வாக்குகளை பெற சாதி , மத ரீதியாக மக்களை பிரித்தாள்கின்றனர்
சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் மக்களை பிரித்து கூறு போட்டு சீரழிக்கும் திட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு துணை போகின்றது.
தாம் வாக்குகளை பெறுவதற்காக சாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் கருத்துகளை மக்கள் மத்தியில் விதைத்து வாக்கு பெற முயலும் செயற்பாட்டை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறாக தமிழ் மக்களின் ஒற்றுமையை சீரழிக்கும் செயற்பாட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம். என தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை