சுதந்திரக் கட்சியினருக்கு அமைச்சு பதவி வழங்குவது குறித்து ஒப்பந்தம் எட்டப்படவில்லை – பிரசன்ன ரணதுங்க
பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெற்றதை அடுத்து சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவது குறித்து எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரசன்ன ரணதுங்க, பொதுஜன பெரமுன ஒரு ஒப்பந்தத்தை சுதந்திரக் கட்சியுடன் மட்டுமே செய்துள்ளது என்றும் அதன் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அல்ல என்று அவர் மேலும் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் எவ்வாறு நடந்துகொள்கிறனர் என்பதை நாம் கவனமாகப் பார்க்க வேண்டும், ஏனெனில் அவரை நம்ப முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தலுக்குப் பின்னர், முன்னாள் ஜனாதிபதியும் அவரது குழுவும் அமைச்சரவையில் பதவிகளை பெற்றுகொளவ்து தொடர்பாக நிபந்தனைகளை விதிக்கலாம் என்றும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அவர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்குவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் எந்த நிபந்தனைகளும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
“இன்று எதிர்க்கட்சி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மக்களுடனான நெருக்கத்தை தடுக்க போராடுகின்றது. ஒரு வலுவான நாட்டைக் கட்டியெழுப்ப ஒரு நிலையான மற்றும் ஒன்றுபட்ட அரசாங்கம் இருக்க வேண்டும்.
நல்லாட்சி அரசாங்கத்தின்போது ரணில் விக்ரமசிங்கவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான மோதல்கள் நாட்டை குழப்பத்தில் ஆழ்த்தின. எதிர்காலத்தில் இதுபோன்ற ஒரு விடயத்தை நடக்க நாங்கள் விரும்பவில்லை” என கூறினார்.
கருத்துக்களேதுமில்லை