இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? குகதாஸ் கேள்வி
இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சபா.குகதாஸ் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும், அண்மையில் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கருத்துக் கூறும் போது அவர்கள் அனைவரும் புலிகளால் கொல்லப்பட்டு விட்டனர் என்ற பொறுப்பற்ற உண்மைக்கு புறம்பான பொய்யான விடையத்தை முன்வைத்தார்.
உண்மையில் 2009 முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது சவேந்திர சில்வா தலைமையிலான 58 காலால் படைப்பிரிவுதான் களத்தில் நின்றனர் அந்தவகையில் 2009 மே 16 திகதி 2 மணியில் இருந்து 18 திகதி வரை வட்டுவாகல் செல்வபுரம் பகுதியில் சரணடைந்த லட்சக்கணக்கான மக்களுள் பலர் ஆயிரக்கணக்கில் இன்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் என உறவுகளால் தேடப்படுகின்றனர்.
இவ்வாறு தேடப்படுபவர்கள் யுத்த களத்தில் இருந்து முழுமையான இராணுவ கட்டுப்பாட்டில் இராணுவத்தினரிடம் பெற்றோர்களால், மனைவிமார்களினால்,உறவினர்களால் கையளிக்கப்பட்டவர்கள்.
ஆகவே வட்டுவாகல் செல்வபுரம் பகுதியிலும், ஓமந்தை சோதனைச் சாவடியிலும் பல ஆயிரக்கணக்கில் சரணடைந்தும் ,கையளிக்கப்பட்டும் அழைத்துச் செல்லப்பட்டு இன்றுவரை அவர்கள் எங்கே உள்ளனர் என தேடி அலையும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் பதில் என்ன? என தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை