கருணா தேர்தலில் போட்டியிடக்கூடாது – தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம்

தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை நீக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவித்திருக்கின்றோம் என ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்ககையில், “கருணா அம்மான் விடுதலைப் புலிகளின் கிழக்கு பிராந்திய ஆயுத படைகளின் தலைவராக இருந்துகொண்டு அவர் மேற்கொண்ட கொலைகள் தொடர்பாக  அவரே தெரிவித்திருந்தார்.

3 ஆயிரம் இராணுவத்தினரை கொலை செய்ததாக அவர் தெரிவித்த கூற்று தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு முறையிட்டிருக்கின்றோம்.

அத்துடன் கருணாவின் கூற்றின் மூலம் பயங்கரவாத தடுப்புச்சட்டம் மற்றும் நாடாளுமன்ற சட்டத்தின் 81ஆவது சரத்து மீறப்பட்டிருக்கின்றது. அதனால் உடனடியாக அவரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து நீக்கவேண்டும் என தெரிவித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலம் அறிவித்திருக்கின்றோம்” என மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.