பொலிஸார் தங்கள் சீருடையின் மரியாதையை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்- கமல் குணரட்ன
பொலிஸார் தங்களின் சீருடையின் மரியாதையை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் செயற்பட வேண்டும் என பாதுகாப்புச் செயலாளரான மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கமல் குணரட்ன மேலும் கூறியுள்ளதாவது, “ஒரு பிரதேசத்தில் கொலையோ, கஞ்சா வியாபாரமோ, போதைப் பொருள் கடத்தலோ, கொள்ளைச் சம்பவங்களோ இடம்பெற்றால், அதற்கு பொலிஸார் பொறுப்பேற்றே ஆகவேண்டும்.
ஒரு பிரதேசத்தில் பாரியளவிலான மரங்கள் வெட்டப்பட்டாலோ, மணல் கொள்ளை இடம்பெற்றாலோ, விபசாரம் நடைபெற்றாலோ அதில் பொலிஸாருக்கும் பங்கு உள்ளது என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம். பங்கு என நான் இங்கு கூறுவது பொறுப்பை ஆகும்.
இதிலிருந்து எவரும் விலகிவிட முடியாது. அரசியல்வாதிகளின் பேச்சைக் கேட்டு செயற்பட வேண்டும் என்ற தேவை யாருக்கும் கிடையாது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், பிரதானமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயம்தான் தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவது.
எனவே, பொலிஸை தொழில் என்று எவரும் நினைக்ககூடாது. இது ஒரு பாரிய சேவையாகும். பொலிஸில் எவ்வளவு நேர்மையான அதிகாரிகள் இருக்கிறார்களோ அதே அளவு, மோசடிக்கார பொலிஸாரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
மக்கள் மதிக்கும் அளவுக்கு, பொலிஸ் சீருடைக்கு மரியாதையுடன் அனைவரும் செயற்பட வேண்டும் என்பதுதான் எமது கோரிக்கையாகும். இதனை கோரிக்கையாகவோ, பணிப்பாகவோ பொலிஸார் எடுத்துக் கொள்ளலாம்” என குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை