காணாமற்போனவர்கள் நீண்டகாலமாகியும் வரவில்லை என்றால் அவர்கள் இறந்திருக்கலாம் – பிரதமர் மஹிந்த

காணாமல் போனவர்கள் நீண்ட காலம் ஆகியும் அவர்கள் மீண்டும் திரும்பவில்லை என்றாலோ அன்றேல் உலகின் எந்தப் பகுதியிலும் இல்லை என்றாலோ அவர்கள் மரணித்து இருக்கலாம் என்றே கொள்ள வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று காலை தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் பிரதானிகளை அலரி மாளிகையில் சந்தித்து உரையாடிய போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் குறித்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்குவதற்கு முன்னுரிமை காட்டுகின்றோம் என்றும் குறிப்பாக வீடமைப்புத் திட்டங்களில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதமர் கடந்த 5 வருட காலத்தைப் பின்னோக்கிப் பார்த்தால் வடக்கிலும் தெற்கிலும் எவ்வித பிவிருத்தி பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் இதற்குக் காரணம் முன்னைய அரசும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தான் என்றும் குற்றம் சாட்டினார்.

வடக்கிலே அபிவிருத்தி நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும் என தெரிவித்த பிரதமர் இதற்கு புலம்பெயர் நாடுகளிலிருந்தும் முதலீட்டாளர்கள் இங்கு வருவார்களேயானால், அவர்களுக்கு உரிய பாதுகாப்பும் சலுகைகளும் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் நாட்டு அபிவிருத்தி மற்றும் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் திட்டங்களின் போது வடக்கு மற்றும் தெற்கு என்ற பேதம் இனியெப்போதும் இருக்காது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.