187 அடி உயரமான பழுதூக்கியின் மீது ஏறி துறைமுக ஊழியர்கள் முன்னெடுத்த போராட்டம் தொடர்கிறது
கொழும்பு துறைமுக தொழிற்சங்க ஊழியர்கள் மூவர் 187 அடி உயரமான பழுதூக்கியின் மீது ஏறி முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்றும் (வியாழக்கிழமை) தொடர்கிறது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் பொருத்துவதற்காக சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட புதிய பழுதூக்கிகளை அங்கு உடனடியாக பொருத்துமாறு கோரியே அவர்கள் இவ்வாறான போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தங்களது கோரிக்கைக்கு தீர்வு கிடைக்காவிட்டால், தொடர்ச்சியாக உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட தயாராகவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
துறைமுகத்தின் கிழக்கு முனையத்தினை இந்தியாவிற்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன்போதே கடந்த அரசாங்கக் காலத்தில் சீனாவில் இருந்து குறித்த மூன்று பழுதூக்கிகளும் கொழும்பு துறைமுகத்தை வந்ததடைந்தன.
இந்த பழுதூக்கிகளை கிழக்கு முனையத்தில் பொருத்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றபோதிலும் இதற்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை