வீரர்களை எதற்காக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்- மஹிந்தானந்த கேள்வி

ஆட்டநிர்ணய சதியில் விளையாட்டு வீரர்கள் எவரையும் குறிப்பிடவில்லை. ஆகவே எதனடிப்படையில் அவர்களை விசாரணைக்கு அழைத்தனரென முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த  அளுத்கமகே கேள்வி எழுப்பியுள்ளார்.

நுவரெலியா- நாவலப்பிட்டி பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் கூறியுள்ளதாவது,“கடந்த 2018 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு பிரிவின் பிரதானியால் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

குறித்த கடிதத்தில், உலகில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் 10 அணிகளில், இலங்கை அணிக்கு எதிராகவே அதிக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆகவே இவ்விடயம் தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என கூறப்பட்டிருந்தது.

இவ்விடயம் குறித்து அண்மையில் ஊடகத்தில் தெரிவித்திருந்தேன். அதனடிப்படையில்தான் என்னிடம் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவி வாக்குமூலமொன்றை பதிவு செய்து கொண்டது. இதன்போது கிரிக்கெட் வீரர்கள் எவரையும் நான் குற்றம் சுமத்தவில்லை.

ஆனால், எதனடிப்படையில் அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

0Shares

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.