குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்துக்கு லண்டன் வழங்கிய உலக மகா விருது…

  • உலக அளவிலான கொரோனா களத் தொண்டில் சிறந்தப் பங்களிப்பை வழங்கிய கடல் கடந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனமான குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்துக்கு, லண்டன் தொண்டு இயக்கம் சர்வதேச மனித நேய விருதளித்துக் கௌரவித்துள்ளது.
    சர்வதேச அளவில் நலப்பணிகளை ஊக்குவிக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான “உலக மனிதாபிமான ஊக்கி” எனும், “வேர்ல்டு ஹ்யுமானிட்டேரியன் டிரைவ்”, கொரோனா களத் தொண்டு இயக்கங்களுக்குச் சிறப்பு விருதுகளை அறிவித்து இருக்கிறது. இதற்குத் தகுதியான அமைப்புகளையும், தனி நபர்களையும் தேர்வு செய்ய 1,600க்கும் அதிகமான பரிந்துரை விண்ணப்பங்கள் வந்திருந்தன. 550க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் களத்தில் இருந்தனர். 100 விருதாளர்களுக்கான ஆய்வுகள் செய்யப்பட்டன. ஏழு கண்டங்களைச் சேர்ந்த 35 நாடுகளிலிருந்து பன்னிரெண்டு பிரிவுகளுக்கான தனி ஆளுமைகளும், 38 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்த நடுவர் குழுவின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
    நடுவர் குழுவின் ஆய்வு முடிவுகளுக்குப் பின் விருதாளர்கள் அறிவிப்பு விழா நடந்தது. கடல் கடந்த அயல்நாட்டுத் தமிழர் அமைப்பான “குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)” சிறந்த சமூகச் சேவை அமைப்பு பிரிவில் சமூகத்தின் தூண் விருதுக்காகத் தேர்வாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டது. சிறப்புச் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. காணொளிக் காட்சியாக நடந்த சிறப்பு விழாவின்போது இந்த சான்றிதழ் முறைப்படி அறிவிக்கப்பட்டு அளிக்கப்பட்டுள்ளது.
    இதற்கான விழா கடந்த மாதம் 28ஆம் தேதி அன்று லண்டனில் காணொலிக் காட்சி வாயிலாக நடந்தது. இதில் கொசோவோ பிராந்திய முன்னாள் தலைவர் பாட்மிர் செய்தியோ, நேபாள் நாட்டு முன்னாள் பிரதமர் மாதவ குமார், அந்தலூசியா தேசிய பாராளுமன்றத்தின் தலைவர் பெற்றோ அல்டாமிரானோ ஆகியோருடன் உலக மனிதாபிமான ஊக்கி நிறுவனர் அப்துல் பாசித் செய்யது பங்கேற்று ஏற்பாடு விழாவை நடத்தினார்.
    இவ்விருதுக்காக குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தைத் தேர்வு செய்த WHD – World Humanitarian Drive நிர்வாகிகளுக்கும், தேர்வுக் குழுவினருக்கும், இதை பெறுவதற்கு காரணமாக திகழும் சங்கத்தின் சேவைப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட அனைத்து நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், களப்பணியாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உள்ளிட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்வதாக குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.