கிளியில் அக்கராஜ மன்னனின் நிகழ்விற்கு பொலிஸார் தடை

கரும்புலிகள் நாள் என்பதால் கிளிநொச்சியில் அக்கராஜ மன்னனின் நிகழ்விற்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அக்கராய மன்னனின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து, அவரை நினைவு கூரும் நிகழ்வொன்று, கரைச்சி பிரதேச சபையினால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  ஆனால், குறித்த நிகழ்வினை இன்று நடாத்துவதற்கு பொலிஸார்  தடை விதித்துள்ளனர்.

இதனால், இந்த விடயம் தொடர்பாக பொலிஸாருடன் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.

எனினும் இன்றைய தினம், கரும்புலிகள் நாள் என்பதால் நிகழ்வை நடத்துவதற்கு முடியாதென தெரிவிக்கப்பட்டதை அடுத்து நிகழ்வு இடம்பெறவில்லை.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளதாவது, “சகல திணைக்களங்களின் அனுமதிகள் பெறப்பட்டு குறித்த சிலை இத்தகைய ஒரு நாளில் திறந்து வைக்கப்பட்டது.

மேலும் மன்னர்களை வருடம் தோறும் நினைவுகூரும் செயற்பாடானது பிரதேச சபையின் வருடாந்த செயற்பாடுகளில் உள்ளடக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த நிகழ்வு இடம்பெற இருந்த இடத்திற்கு வருகை தந்த, பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து இந்த விழாவை தடுத்து நிறுத்தினர்.

இவர்கள் நீதிமன்ற தடை உத்தரவையோ அல்லது பொலிஸ் அதிகாரத்தினடிப்படையில் எழுத்து மூலமான தடை உத்தரவொன்றின் ஊடாகவோ தடுத்து நிறுத்தவில்லை.

குறித்த நிகழ்வை, பயங்கரவாத செயற்பாடுகள் போன்று அடையாளம் காட்டுவதற்கு முற்படுவது போன்றே அவர்களின் செயற்பாட்டை நாங்கள் பார்க்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.