தமிழ் மக்களின் இருப்பைப் பாதுகாத்து பொருளாதாரத்தை வளமாக்குவதே இலக்கு- கருணா
தமிழ் மக்களின் இருப்பைப் பாதுகாத்து பொருளாதாரத்தை வளமாக்குவதே தனது இலக்கு என ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.
அம்பாறை, கல்முனையில் நேற்று (திங்கட்கிழமை) இரவு இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், “அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமே தொடரும். அந்த ஆட்சியில் பங்காளிக் கட்சியாக இருந்து மக்களுக்கான சேவைகளை நாம் முன்னெடுப்போம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது நானே. ஆனால் சம்பந்தர் ஐயா ‘அப்படியில்லை புலிகளால் உருவாக்கப்படவில்லை’ என்று கூறுகிறார். உண்மையில் அக்கட்சி உருவாக்கத்தின்போது அருகில் நானிருந்தேன். இன்றும் உயிருடன் இருக்கிறேன். இதனை எப்படி மறைப்பது?
அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் இருப்பைப் பாதுகாத்து பொருளாதாரத்தை வளமாக்குவதே எனது இலட்சியம். ஆனால், எனது வருகையை அடுத்து இங்கு முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் பயம் வந்துவிட்டது.
கடந்த நான்கரை ஆண்டுகளில் எமது மக்களை சீரழித்துவிட்டார்கள். வாக்களித்த மக்களை நடுத்தெருவில் விட்டுவிட்டு இன்று மீண்டும் வாக்குக் கேட்டு வருகிறார்கள்.
எனவே, எமது சின்னம் வெறும் கப்பல் அல்ல. தத்தளிக்க மக்களை காப்பாற்றி கரைசேர்க்கும் கப்பல். எனவே தத்தளிக்கின்ற அம்பாறை தமிழ் மக்களைக் காப்பாற்றி கரைசேர்க்கின்ற இந்த கப்பலுக்கு வாக்களித்து வாழ்வை வளப்படுத்துவதோடு இருப்பையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்” என்றார்.
கருத்துக்களேதுமில்லை