பளை வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையதாக மற்றுமொருவர் கைது!
பளை வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி, இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரே நேற்றிரவு படையினரால் கைதுசெய்யப்பட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது, இரத்தினசிங்கம் கமலகரன் (வயது-40) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தரே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கிளிநொச்சி சிவில் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 3ஆம் திகதி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ்வாறு வெடிப்பு இடம்பெற்ற காயமடைந்தவரின் வீட்டில் பொலிஸார் மற்றும் படையினர் சோதனையிட்டபோது அங்கிருந்து பிளாஸ்ரிக்கினால் செய்யப்பட்ட குண்டுகள் உட்பட சில பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து குற்றச்செயல் ஒன்றுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் தடயப் பொருட்களை அழிக்க முற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவரின் மனைவி பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இதையடுத்து இடம்பெற்ற விசாரணையில் மற்றுமொருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர், புலனாய்வுப் பிரிவினர், பொலிஸார் மற்றும் படையினரால் தொடர் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
கருத்துக்களேதுமில்லை