கரையோரப் பகுதிகளை பறித்தெடுக்கும் முயற்சியில் தொல்பொருள் செயலணி: மக்களே அவதானம்- சாணக்கியன்
கரையோரப் பகுதிகளை பறித்தெடுப்பதற்கான நடவடிக்கையி இந்த தொல்பொருள் செயலணி எனவும் இது தொடர்பில் தமிழ் மக்கள் அவதானமாக இருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஆளும் கட்சி ஊடாக மட்டக்களப்பில் உள்ள மக்களுக்கு நம்பிக்கையற்ற நிலை காணப்படுவதை நேற்று உணர்ந்துகொண்டதாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளருமான இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “வேற்றுச் சேனையில் மக்களினால் ஏற்பாடுசெய்யப்பட்ட எதிர்ப்புத் தெரிவிக்கும் செயற்பாட்டிற்கு பொலிஸார் சில தடைகளை ஏற்படுத்த முனைந்தபோது சிறிய முறுகல் நிலையேற்பட்டது.
அந்தக் காணியானது உறுதியைக்கொண்ட காணியாகும். சில தினங்களுக்கு முன்னர் பிக்கு ஒருவர் பொலிஸ் மற்றும் இராணுவப் பாதுகாப்புடன் வந்து அந்தக் காணியை அளவீடு செய்து அதில் எதிர்காலத்தில் அடையாளமிட்டு தொல்பொருள் வேலைத் திட்டங்களை செய்யப் போவதாக தெரிவித்திருந்த நிலையில் அதில் அதிருப்தியடைந்த மக்கள் அதற்கான எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர். அவ்வேளையில், நேற்றுமுன்தினம் என்னையும் மக்கள் அழைத்திருந்தனர்.
உண்மையில் இந்த அரசாங்கத்தின் பங்காளிகளாக புதிய ஜனாதிபதியை கொண்டுவர வேண்டும் என்று செயற்பட்டவர்கள் அங்குவந்து மக்களுடன் இணைந்து தாங்களும் எதிர்ப்பதாக காட்டமுற்பட்டபோது அதற்கு மக்கள் எதிர்ப்பினைத் தெரிவித்து அவர்களை விரட்டியடித்தனர். இது ஆளும் கட்சியில் போட்டியிடுவோருக்கு ஒரு சாட்டையடியாகும். அவர்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதை நாங்கள் அங்கு உணர்ந்தோம்.
அரசாங்கம் உருவாக்கிய தொல்பொருள் ஆய்வு செய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு, தொடர்பான அதிருப்திகளையும் இவ்வாறான செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கும் அரசாங்க கட்சியில் இருப்பவர்கள் மக்களோடு இருந்து கொண்டு கோசம் போட வேண்டியதில்லை. அவர்கள் அவர்களது அரசாங்கத்திடம் தெரிவித்து இதற்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியும்.
அன்று குசனர் மலையிலும் இன்று வேற்றுச்சேனையிலும் நடந்ததைப் போன்று நாளை இந்த பிரச்சினை எங்கு நடக்கப்போகின்றது என்று எதிர்பார்க்கும் நிலையே உள்ளது.
கல்லேயா எதிர்ப்பு போராட்டம், ஸ்ரீ எதிர்ப்பு போராட்டம் போன்றதொரு கால கட்டத்திற்குத்தான் நாங்கள் தற்போது தள்ளப்பட்டுள்ளோம். மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்காமல் விட்டால் மங்களகம, கெவுளியாமடு கிராமங்களைப் போல் நமது பிரதேசங்களும் சென்றுவிடும்.
தொல்பொருள் செயலணியில் தமிழ் பேசும் பிரதிநிதிகள் எவரும் இல்லை. எனவே இவ்வாறான முக்கியமான தொல்பொருட்கள் விடயங்கள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழக்குகளைப் பதிவு செய்யவுள்ளது.
இதேவேளை, சிலர் என்னைப் பற்றி விமர்சிக்கின்றார்கள். நான் யாரையும் கொலை செய்வோ, களவு செய்வோ, கற்பழிக்கவே இல்லை. என்னைப் பற்றி விமர்சிப்பதொன்றால் எனது கடந்த கால அரசியலைப் பற்றித்தான் விமர்சிக்கலாம். அது மக்களுக்குத் தெரியும். அது எனக்கு இன்னும் பலமாக அமையும். மக்கள் போலி அரசியல்வாதிகளை தொடர்ந்து விரட்டியடிக்க வேண்டும்” என குறிப்பிட்டார்.
கருத்துக்களேதுமில்லை