மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன மத பேதம் கடந்த சிரமதானம்!

மட்டக்களப்பு-மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில்   மட்டக்களப்பு மாநகர சபையினரால் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்களின் தலைமையில் காலை  ஆரம்பமான இச் சிரமதானப் பணி மாமாங்கேஸ்வரர் ஆலய வளாகம் பூராக நடைபெற்றது.

மாநகர சுகாதாரப் பிரிவுத் தலைவர் சிவம் பாக்கியநாதன் வழிகாட்டலில் நடைபெறும் சிரமதான நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

சிரமதான நிகழ்வினை மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், ஆணையாளர் க.சித்திரவேல், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா மற்றும் மாநகர சபை அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மேற்பார்வை செய்தனர்.

வருடம் தோறும் மட்டக்களப்பு மாநகர சபையினர் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் உற்சவ காலத்திற்கு முன்பதாக மேற்கொண்டுவரும் இச் சிரமதானப் பணி இம்முறையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மதபேதம் இல்லாது இஸ்லாமிய உத்தியோகத்தர்களும் ஆலய சிரமதானப்பணியில் கலந்துகொண்டமையை காணக்கூடியதாக இருந்தது.

மட்டக்களப்பு பேராலயங்களில் ஒன்றான மாமாங்கேஸ்வரர் ஆலய திருவிழாக்கள்  எதிர்வரும் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இம்முறை ஆலய திருவிழாக்களில் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக 50 பேர் மாத்திரம் பங்குகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.