20 வருடங்களாக எதையுமே சாதிக்க முடியாதவர்கள் மற்றவர்களை இகழ்வது நகைப்புக்குரியது- குணசீலன்
20 வருடங்களாக எதையுமே சாதிக்க முடியாதவர்கள், சந்தர்ப்பமே கொடுக்காமல் மற்றவர்களும் சாதிக்க மாட்டார்கள் என்று கூறுவது ஒரு நகைப்புக்குரிய விடயம் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளர் வைத்தியர் ஞானசீலன் குணசீலன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், “சுமார் 20 வருடங்களாக எதையுமே சாதிக்க முடியாதவர்கள், சந்தர்ப்பமே கொடுக்காமல் மற்றவர்களும் சாதிக்க மாட்டார்கள் என்று கூறுவது ஒரு நகைப்புக்குரிய விடயமாக இருக்கின்றது.
உண்மையிலே கூட்டமைப்பு என்கின்ற கட்சியே இல்லை. தமிழரசுக் கட்சிதான் இருக்கின்றது. கூட்டமைப்பு என்கின்ற கட்சியை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட அல்லது அந்தக் கட்சியை பதிவுசெய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட எல்லா முயற்சிகளும் தமிழரசுக் கட்சியினால் முறியடிக்கப்பட்டுள்ளன.
தமிழரசுக் கட்சியுடன் சேர்ந்திருந்த சகோதாரக் கட்சிகள் கூட கூட்டமைப்பு பதியப்பட வேண்டும் என்று கூறிவந்தன. முன்னாள் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை எடுத்த முயற்சியின் கீழ் ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்திருந்த நிலையில் அதனைக் குழப்பி தடுத்த பங்கு தமிழரசுக் கட்சியையும் தமிழீழ விடுதலை இயக்கத்தையுமே சாரும்.
அன்று தொடக்கமே அவர்களிடையே கூட்டமைப்பை பதிய வேண்டும், அதற்குப் பலத்தைச் சேர்க்க வேண்டும், எல்லாக் கட்சிகளுக்கும் சம அந்தஸ்தை வழங்க வேண்டும் என்ற தன்மை அங்கு காணப்படவில்லை.
அந்த ஜனநாயகம் அவர்களிடம் இருக்கவில்லை. ஆனால் அவர்கள் இன்று எதையும் சாதிக்காமல் மற்றவர்கள் எதனை சாதிப்பார்கள் என்று கேள்வி கேட்கிறார்கள்.
சந்தர்ப்பத்தை அளித்துப் பார்க்க வேண்டும். ஆகவே நாங்கள் இம்முறை கேட்பது மாற்றம் ஒன்று வேண்டும். மக்கள் கட்டாயமாக இன்னொரு சந்தர்ப்பத்தை எங்களுக்கு வழங்க வேண்டும். எங்களுக்கு சாதிக்கக்கூடிய வகைகளில் அதிகாரத்தைப் பெற்றுத்தர மக்கள் முன்வர வேண்டும்.
கருத்துக்களேதுமில்லை