இன முரண்பாட்டை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி – ஞா.சிறிநேசன்

இந்த நாட்டில் மீண்டும் இனமுரண்பாட்டினை ஏற்படுத்தி பகையினை உருவாக்கும் செயற்பாடே இந்த அரசாங்கத்தின் செயற்பாடாகவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”தொல்லியல் இடங்களை அடையாளம் காணுதல் என்ற பெயரில் தமிழர்களுக்கு தொல்லைகொடுக்கின்ற நிகழ்ச்சித்திட்டம் அரசாங்கத்திடம் இருக்கின்றது.அந்த அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 56 இடங்கள் தொல்லியல் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

தாந்தாமலை,குடும்பிமலை,குசனானமலை, வேற்றுச்சேனை,சத்துருக்கொண்டான்,ஈரலக்குளங்கள் என இந்த 56 இடங்களும் இந்த அரசினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த இடங்களை உடனடியாக பார்வையிடுவதும் எல்லைகளை அடையாளப்படுத்துவதுமான செயற்பாடுகள் ஈடுபட்டுவருகின்றனர். வேற்றுச்சேனையில் நடைபெற்ற சம்பவத்தினை எடுத்துக்கொண்டால் தனியார் காணியொன்றினை அதுவும் தொல்லியல் என்ற அடிப்படையில் பௌத்த துறவிகளும் இராணுவத்தினரும் அந்த எல்லைப்படுத்தல் செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றனர்.அந்த மக்கள் வெள்ளம் உட்பட பல்வேறு அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் மக்கள்.அவர்களை வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சும் செயலாகவே இதனை பார்க்கின்றோம்.

காணாமல்போனவர்கள் எங்கு இருக்கின்றார்கள்,எங்கு புதைக்கப்பட்டார்கள்,அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் மக்கள் அழுதுகொண்டிருக்கும் நிலையில் மேலும் மண்ணை அபகரிக்கும் நோக்கில் வேற்றுச்சேனையில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாங்கத்தின் சார்பாக செயற்படுகின்ற மொட்டுக்கட்சியாக இருக்கட்டும்,படகு கட்சியாக இருக்கட்டும் சூரியன் கட்சியாக இருக்கட்டும்.இந்த கட்சிகளைப்பொறுத்தவரையில் அரசின் செயற்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பதை அப்பட்டமாக பார்க்ககூடியதாக இருக்கின்றது.

வேற்றுச்சேனையில் நடைபெற்ற இவ்வாறான சம்பவம் என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.இவ்வாறான செயற்பாடுகள் மூலமாக இன ஐக்கியத்தினை ஏற்படுத்தமுடியாது.

நல்லிணக்கத்தினை ஏற்படுத்தமுடியாது. இந்த நாட்டில் இனமுரண்பாடுகளை ஏற்படுத்தி மீண்டும் பகைமையினை உருவாக்கின்ற ஒரு செயற்பாடாகவே இந்த அரசியன் செயற்பாடுகள் அமைந்துள்ளது.

இந்த தொல்லியன் செயலணியின் முழுக்க பௌத்தர்கள்,சிங்களவர்கள் இருக்கின்றார்கள்.ஏனைய மதத்தவர்கள் எவரும் இல்லை.இலங்கையில் தொல்லியல் இடங்களில் இந்துக்கலாசார இடங்களும் உள்ளது என்பதை அவர்கள் மறந்துள்ளனர்.இது ஒருபக்க செயற்பாடாகே உள்ளது.தமிழ் மக்களை மீண்டும் ஒரு கஸ்டமான நெருக்கடியான நிலைக்கு தள்ளப்போகின்றது என்பது எடுத்துக்காட்டாக இருக்கின்றது.

வாழையடி வாழையாக நீண்டகாலமாக வாழ்ந்த மக்களின் நிலங்களை அபகரிப்பதற்கான நயவஞ்சகமான செயற்பாடாகவே இதனை பார்க்கின்றேன்.

மொட்டுக்கட்சியில் போட்டியிடுகின்றவர்கள் ஒதுங்கிநின்று வேடிக்கைபார்க்கின்ற நிலைமையில்தான் இருக்கின்றார்களே தவிர அவர்களால் தடுக்கமுடியாது.” என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.