பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் – வேலாயுதம் தினேஷ்குமார்
பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வேலாயுதம் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இன்று(புதன்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கூட்டு ஒப்பந்தத்தில் சம்பளம் மட்டுமல்ல தொழிலாளர்களின் நலன்புரிசார் விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆனால், சம்பளம் குறித்து மாத்திரம் கதைத்து ஏனையவை மறைக்கப்பட்டு – மழுங்கடிக்கப்பட்டு வருகின்றன.
தேயிலை தோட்டங்களை காடாக்கமுடியாது, தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் போன்ற விடயங்களும் உள்ளன. இவை உரியவகையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் குளவிக்கொட்டு, சிறுத்தை தாக்குதல் போன்ற பேரனத்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை எமது மக்களுக்கு ஏற்படாது.
அரசாங்கம், தொழிற்சங்கங்கள் மற்றும் கம்பனிகள் இணைந்து இதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முடியும். குளவிக்கூடுகளை இயற்கையான முறையில் அகற்றுவதற்கான வழிமுறைகள் உள்ளன. வனவளத்துறை அமைச்சிடம் அதற்கான அதிகாரிகளும் உள்ளனர்.
எனவே, இனியும் தாமதிக்காது – எமது தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
அதேவேளை, ஆரம்பத்தில் பெருந்தோட்டத்துறையில் லட்சக்கணக்கானவர்கள் தொழில் புரிந்தனர். இன்று அந்த எண்ணிக்கை பல மடங்காக குறைவடைந்துள்ளது.
தொழில் பாதுகாப்பு இன்மை, தொழில்நுட்ப சிந்தனை இன்மை, தூரநோக்கு பார்வையற்ற தன்மை போன்றவே இதற்கு பிரதான காரணமாகும்.
எனவே, நவீன யுகத்துக்கேற்ப தொழில்நுட்ப அறிவைப்பயன்படுத்தி எவ்வாறு இத்துறையைக் கட்டியெழுப்பலாம் என்பது பற்றியும், பெருந்தோட்டத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்கி, தொழிலாளர்களாக மட்டுமின்றி அவர்களை அதிகாரிகள் மட்டத்துக்கு கொண்டுசெல்லவேண்டும்.
அதாவது இதனை எவ்வாறு கௌரவமிக்க துறையாக கட்டியெழுப்பலாம் என்பது பற்றிய யோசனைகள் எம்மிடம் உள்ளன. எமது ஆட்சியில் அவை நடைமுறைப்படுத்தப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை