ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாக எண்ணி தமிழரைக் கொச்சைப்படுத்துகிறார் விக்கி ஆயுதப் போராளிகள் குறித்துப் பேசுவதற்கு அவருக்கு அருகதை இல்லை என்கின்றார் கணேஷ் வேலாயுதம்
“போராளிகள் குறித்து பேசுவதற்கல்ல வாய் திறப்பதற்கே வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அருகதை இல்லை. 5 வருடம் அவர் இருந்தது கதிரையில் அல்ல போராளிகளின் தியாகத்தில்தான். ஆயுதம் தாங்கிப் போராடியவர்கள் பெற்றுக்கொடுத்த மாகாண சபைக் கதிரையை 5 வருடங்களாகப் பிடித்துக் கொண்டிருந்து மக்களுக்கு ஒன்றுமே செய்யாத விக்னேஸ்வரன், ஆயுதப் போராட்ட இயக்கங்களைச் சேர்ந்தவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் எனக் கூறுவதற்கு எந்தவொரு அருகதையும் அற்றவர்.”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் வேலாயுதம் கணேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
“நான் விக்னேஸ்வரனுக்கு சவால் விடுகிறேன். 12 மணிக்கு நித்திரைக்குச் சென்று 4 மணிக்கு நித்திரையால் எழும்பியதை தவிர அவர் வேறு என்ன சாதித்தார்? அதனைக் கூற முடியுமா? இரணைமடு, சுன்னாகம் நிலத்தடி நீர், நெல்சிப் எனப் பல ஊழல் மோசடிகளுக்கு என்ன நடவடிக்கை எடுத்தார்? என்ன எடுக்க முடிந்தது?” எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“விக்னேஸ்வரன் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே ஆயுதப் போராட்ட வழியில் இருந்து வந்தவர்களுக்கும், அரச கட்சிகளுக்கும் மக்கள் ஆதரவளிக்க வேண்டாம் என கூறியிருக்கின்றார். அவருடைய கட்சியிலேயே ஆயுதப் போராட்டம் சார்ந்த 4 பேர் இருக்கையில் அவர் இப்படி கூறுகின்றார். ஆகவே, உட்கட்சிக்குள் முறுகல் இருப்பதை அவரே அம்பலப்படுத்துகின்றார்.
இதே விக்னேஸ்வரன் 5 வருடங்கள் இருந்த வடக்கு மாகாண சபை கதிரை ஆயுதம் தாங்கி போராடியவர்களால் கிடைத்தது. அதையும் ஒழுங்காகப் பயன்படுத்தத் தொியாமல் கவிழ்த்துக் கொட்டியதே மிச்சம்.
இதே முதலமைச்சர் மாகாண சபையை பொறுப்பேற்கும்போது 6ஆவது இடத்திலிருந்த மாகாணத்தின் கல்வி இவர் பதவியேற்றதன் பின்னர் 9ஆவது இடத்துக்கு அடகுவது கடைசி இடத்துக்கு வந்துள்ளது என்பது அனைவருக்கும் தொியும்.
விக்னேஸ்வரனுக்கு ஆயுதப் போராட்ட வழியில் இருந்து வந்தவர்களைக் குறித்து பேசுவதற்கு என்ன அருகதை உள்ளது? 1983ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் நாங்கள் ஆயுதமேந்திப் போராடியபோது அப்போதைய பிரதமர் ரணசிங்க பிரேமதாஸவுக்காக மேடை ஏறியவரே விக்னேஸ்வரன்.
2009ஆம் ஆண்டு தமிழினம் அழிக்கப்பட்டபோது விக்னேஸ்வரன் எங்கே இருந்தவர்? எனக்குத் தொிந்த தமிழ் அரசியல் கைதிகள் சொல்வார்கள் இவர் நீதிமன்றுக்கு வந்துவிடக்கூடாது. சிங்கள நீதிபதிகள் வரவேண்டும் என தாங்கள் கும்பிடவார்களாம். அந்தளவுக்குக் கடுமையான தண்டணைகளைக் கொடுப்பவராம்.
மேலும் 2013ஆம் ஆண்டு கனடாவுக்கு வீசா கிடைத்திருந்தால் கனடாவுக்குச் சென்றிருப்பேன் என்று அவரே கூறியுள்ளார். வடக்கு மாகாண சபை ஆட்சியில் 4ஆவது வருடத்தில் பிரச்சினை கிளம்பியபோது இவர் ஒழுங்கான ஆளாக இருந்திருந்தால் பதவியைத் துாக்கி வீசிவிட்டு சென்றிருப்பார். ஆனால், 5 வருடங்களும் முதலமைச்சர் கதிரை ஆசையில் ஆட்சியைப் பிடித்துவைத்திருந்தவர் இப்போது நாடாளுமன்ற உறுப்பினர் கதிரை ஆசையில் தனக்கு 5 வருடங்கள் கேட்கின்றார்.
ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாக எண்ணி தமிழர்களைக் கொச்சைப்படுத்துகின்றார் விக்னேஸ்வரன். ஆயுதப் போராளிகள் குறித்துப் பேசுவதற்கு அவருக்கு எந்தவித அருகதையும் இல்லை இல்லை” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை