போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின் சான்றுப்பொருள் களஞ்சியசாலையில் சோதனை நடவடிக்கை!
போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின், வழக்குகளின் சான்றுப்பொருட்கள் உள்ள களஞ்சியசாலையை அரச பகுப்பாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.
குறித்த களஞ்சியசாலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முத்திரையிடப்பட்டிருந்த நிலையில், கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவால் நேற்று பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவிற்கமைய இன்று (வியாழக்கிழமை) இந்த நடவடிக்கை இடம்பெறுகிறது.
ஹெரோயின் போதைப்பொருள் குறித்த அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
அந்தவகையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் அமைந்துள்ள கட்டடத்தின் 3ஆவது மாடியில் உள்ள பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திற்குச் சென்ற அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளுடன் இணைந்து சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
போதைப் பொருள் வியாபாரிகளிடம் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்த சம்பவம் குறித்து பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 21 பேரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைதுசெய்திருந்தனர்.
இவ்வாறு கைதானவர்களில் 12 பேர் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை