ஐக்கிய மக்கள் சக்தி குறைந்தது நூறு ஆசனங்களையாவது பெறும் – ரவூப் ஹக்கீம்
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி நூறு ஆசனங்களாவது பெறக்கூடிய வாய்ப்பு நிச்சயமாக உள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நேற்று (வியாழக்கிழமை) இரவு வாழைச்சேனையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திலும் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ”நாங்கள் புதிய அரசியல் உருவெடுத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியில் ஆளும் கட்சியில் இருந்து அதிக பெரும்பான்மையானோர் எங்களது கட்சியில் இணைந்துள்ளனர். அதனோடு இணைந்து அனைத்து சிறுபான்மை கட்சிகளும் ஒன்று சேர இருக்கின்ற மிகப்பெரிய இயக்கம்.
ஐக்கிய மக்கள் சக்தியில் கல்குடாப் பிரதேசத்தில் போட்டியிடுபவருக்கு வெற்றி கிடையாது. அதைப்பற்றி எங்களுக்கு கவலையும் இல்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட முடியாது. நான் கண்டியில் இந்த கட்சியில் கேட்டாலும் இங்கு நாங்கள் இந்த கட்சிக்கு வாக்கு கேட்டு வரவில்லை.
நாடாளுமன்றத்தில் கட்சி என்ற அந்தஸ்த்தை தூக்கி பிடிக்கின்ற ஒரேயொரு அடையாளம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாங்கள் பெறுகின்ற ஆசனம்.
தலைவர் பெறும் ஆசனத்தினை விட மட்டக்களப்பில் மரத்தில் வெற்றி பெறும் ஆசனம் தான் தலைவருக்கு மதிப்பையும், மரியாதையும் தரும் என்பதை மறந்து விட முடியாது.
யாரிடம் கேட்டாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆசனம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறுகின்றார்கள். கல்குடாத் தொகுதியில் ஒரு ஆசனத்தினை பெறலாம் என்ற உற்சாகம் வேண்டும். எங்களுடைய கட்சி நிறத்தில் பலர் பிரச்சாரம் நடாத்துகின்றனர்.
கண்டியிலும் பார்த்தால் பச்சை, மஞ்சள். ஏன் கொழும்பிலும் அதே நிலைமைதான் சஜித் பிரேமதாச பச்சை, மஞ்சள் சால்வை தொப்பி அணிந்து செல்கின்றார். அவர்களுக்கு தெரியாது நமது கட்சி நிறம்; என்று. நாமும் அதில் உள்ளதால் எதுவும் செய்யவில்லை. இல்லையெனில் வழக்கு போட முடியும். இதனால் நாடு முழுவதும் இருப்பதால் சந்தோசமாக உள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்றத்தில் பச்சை, மஞ்சள் நிறத்திலான ஐக்கிய மக்கள் சக்தி நூறு ஆசனங்களாவது பெறக்கூடிய வாய்ப்பு நிச்சியமாக உள்ளது என்பது எங்களுக்கு பெரிய சந்தோசம். எமது கட்சி நாடு தழுவிய ரீதியில் பலமாக இயக்கமாகும். நாங்கள் ஆளும் கட்சி, எதிர்கட்சியில் இருந்தாலும் முஸ்லிம்கள் ஆளும் கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிதான் என்பதை இந்த தேர்தல் உறுதி செய்யும். என்றார்.
கருத்துக்களேதுமில்லை