யாழில் தேர்தல் கடமைகளுக்கு சுகாதார, கல்வித்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பு தொடர்பாக கலந்துரையாடல்
தேர்தல் கடமைகளுக்கு சுகாதார தரப்பினர் மற்றும் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
தெரிவத்தாட்சி உத்தியோகத்தரும் மாவட்ட அரசாங்க அதிபருமான க.மகேசன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடல்களில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்கம் அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.தேவநேசன், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் , மாகாண வலயக் கல்விப்பணிப்பாளர்கள், மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள், மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
வாக்களிக்கும் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களாக பெரும்பாலும் பாடசாலைகளே காணப்படுவதால் அந்நிலையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய சுகாதார நடைமுறைகள்- (கைகழுவுதல் ,தொற்று நீக்கல்,சமூக இடைவெளி பேணல், தளபாட தேவைப்பாடுகள்) பாடசாலைகளை தொற்று நீக்கி கையளித்தல், மற்றும் அலுவலர்களை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் என்பன தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது,
மேலும் தேர்தல் கடமைகளுக்காக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் ஓகஸ்ட் முதலாம் திகதி கையேற்கப்பட்டு மீண்டும் ஆறாம் திகதி மீள குறித்த பாடசாலை நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
வாக்கெடுப்பு நிலையங்களிலும், வாக்கெண்ணும் நிலையங்களிலும் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.
கருத்துக்களேதுமில்லை