தமிழினமே விழிப்பாக இருங்கள்!: அரசாங்கத்தின் எலும்புத் துண்டுகளுக்காக பலர் களமிறக்கம் – ஸ்ரீதரன்
வடக்கு கிழக்கில் தமிழினம் விழிப்பாக இருக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் சி.ஸ்ரீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், திட்டமிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பை அழிக்க அரசாங்கம் மட்டுமல்லாது எம்மவர்களில் சிலரும் அரசாங்கத்தின் எலும்புத் துண்டுகளுக்காக களம் இறக்கப்பட்டுள்ளார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், அளவெட்டியில் இடம்பெற்ற கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், “இலங்கை அரசாங்கத்தின் துணை அரசியல்வாதிகள், அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகள் தமிழர் தாயகப் பகுதிகளில் களம் இறக்கப்பட்டுள்ளன.
இதில், சிலர், சில கட்சியினர் 2009 காலப் பகுதியின் பின்னர் தொடர்ந்து பலமான தமிழ் தேசியத்தின் சிந்தனையுடன் பயணம் செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்பை அழிக்க வேண்டும் என்று பல வகையான எதிர்ப்பு அரசியலை செய்வது பலரும் அறிந்த விடயம்.
தமிழினம் விழிப்பாக இருங்கள்! தமிழர் சுதந்திரமாக உரிமைகளோடு வாழ வேண்டிய வழிமுறைகள் மேற்கொள்ள தமிழ் தேசியத்தின் வழி உருவாக்கம் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரியுங்கள்!
எந்த பிரதேசத்தில் இருந்தும் தமிழர் ஒருவர் தமிழர் தாயகப் பகுதிகளில் அரசியல் செய்யலாம். அது தமிழ் தேசியத்தின் வழி உருவாக்கம் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பயணிப்பதாக இருக்க வேண்டும்.
மாறாக தமிழ் தேசியத்தின் வழி உருவாக்கம் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பை அழித்து அரச கட்சிகளையும் அரச கைக்கூலிகளின் கட்சிகளையும் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் இனத்திடம் திணிப்பதனை ஒரு போதும் ஏற்க முடியாது.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழினம் விழிப்பாக இருங்கள்! திட்டமிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பை அழிக்க அரசாங்கம் மட்டுமல்லாது எம்மவர்களில் சிலரும் அரசாங்கத்தின் எலும்புத் துண்டுகளுக்காக களம் இறக்கப்பட்டுள்ளார்கள்.
வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள் ஒற்றுமையாக இருப்பதன் மூலம் மட்டுமே தமிழர்கள் சுதந்திரமாக வாழ வழி கிடைக்கும். தமிழினத்தின் உரிமைக்காக எவ்வளவோ அர்ப்பணிப்புகளை தமிழினம் செய்துள்ளது. தாங்க முடியாத அவலங்களை அனுபவித்தும் உள்ளது.
தமிழினம் ஒற்றுமையாக இணைந்து சர்வதேசத்திற்கு தங்கள் தேவைகளை கூற வேண்டிய அவசியம் உள்ளது. தமிழர் தாயகப் பகுதிகளில் பிறந்து வளர்ந்த அனைவரும் சிங்களம் தந்த அல்லல்களை மறந்துவிடவும் முடியாது. அனுபவ ரீதியாக நினைத்துப் பார்க்கவும் முடியாது. இலங்கையில் வாழும் எந்த தமிழனாலும் பழைய நினைவுகளை மீட்டிப் பார்க்கவும் முடியாது. தமிழினத்தின் தேவைகள் தொடர்பாக சிந்திக்கவும் முடியாது.
எனவே, தமிழர் தாயக தேசமாகிய வடக்கு கிழக்கு மாகாணங்களில் எம்மவர்களது வலிகளைக் கண்டு குரல் கொடுத்துவரும் கூட்டமைப்பு என்கின்ற அரசியல் கட்சியால் மட்டுமே தமிழினத்திற்கான விரைவான நீதியை அரசியல் அபிலாசைகளைப்பெற உழைக்க முடியும். பெற்றுத்தர முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை