கொரோனாவின் இரண்டாம் அலை ஆரம்பமாகிவிட்டது: அரசாங்கம் மறைக்கின்றது- ரணில்

நாட்டில் கொரோனாவின் இரண்டாம் அலை ஆரம்பமாகி விட்டதென ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா வைரஸினால் ஏற்பட்டுள்ள உண்மையான தாக்கம் குறித்த தகவல்களை அரசாங்கம் மறைப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக ரணில் விக்ரமசிங்க, தனது ருவிட்டர் பக்கத்தில் காணொளியொன்றை பதிவேற்றியுள்ளார்.

குறித்த ருவிட்டர் காணொளி பதிவில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை அடையாளங்காண்பதற்காக நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகள் நடவடிக்கையில் இருந்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் விலகியுள்ளது.

இவ்வாறு அவர்கள் விலகியிருப்பதன் ஊடாக சுகாதார அமைச்சு தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள தாக்கம் தொடர்பாக உண்மையான தகவலை  அரசாங்கம் வெளியிட வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையே தற்போது ஆரம்பமாகியிருக்கின்றது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு என்னால் முன்மொழியப்பட்ட விடயங்களை அரசாங்கத்துடன்  டீல் செய்வதாக கூறினர். இப்போது அனைவருக்கும் நான் கூறிய விடயங்கள் குறித்து விளங்கியிருக்கும்.

வைரஸ் தொற்றைக் கண்டறிவதற்கான நாளொன்றுக்கு 5000 பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கூறினோம். அரசாங்கம் அதனை செய்யவில்லை.

நாம் கூறியபோதே நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தால், இக்கட்டான சூழ்நிலைக்கு முகம் கொடுத்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.