நிந்தவூரில் இரண்டு கொரோனா நோயாளர் அடையாளம் காணப்பட்டதாக வெளியான தகவல் போலியானது!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இருவர் நிந்தவூர் பகுதியில் அடையாளம் காணப்பட்டதாக பரப்பப்படும் விடயம் ஒரு வதந்தி என கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘அண்மைக்காலமாக நாட்டில் கொரோனா அனர்த்தத்தின் தாக்கம் செல்வாக்கு செலுத்தியுள்ள நிலையில் எமது பகுதி மக்கள் இன்னும் பாதுகாப்பு நடைமுறை சுகாதார பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதில் அசமந்த போக்கினை கொண்டுள்ளனர்.

இதனை தவிர்க்கும் விதமாக குறிப்பாக நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரியினால் மக்களுக்கென அறிவிக்க பள்ளிவாசல்களுக்கு  விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் இரு கொரோனா நோயாளிகள்  நிந்தவூர் பகுதியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக அச்சிடப்பட்டிருந்தது.

எனினும் அதில் எவ்வித உண்மையும் கிடையாது. அவ்விடயம் மக்களினை விழிப்படைய செய்வதற்காகவே மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் தற்போது  கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களுடன் தொடர்பில் இருந்த  இரு இராணுவத்தினர் அடையாளம் காணப்பட்டனர்.

அவர்கள் அம்பாறை மாவட்டத்தில் உள்ள இரு வேறு இராணுவ முகாமில் கடமையாற்றி வருகின்றனர். இதுவே உண்மையாகும். எனவே நிந்தவூர் பகுதியில் இரு கோரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட தகவல் என்பது வெறும் வதந்தியாகும்.

எனவே தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நபர்கள் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அத்துடன் பொதுமக்கள் இவ்வச்சுறுத்தலில் இருந்து தவிர்ந்து கொள்ளும் முகமாக முகக்கவசம் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடந்து கொள்வது அவசியமாகும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.