பொருட்கள், சேவைகளின் விலையைக் குறைக்குமாறு கோரி ஹட்டனில் ஆர்ப்பாட்டம்

‘ஜெட்’ வேகத்தில் உயர்வடைந்துள்ள பொருட்கள், சேவைகளின் விலையைக் குறைக்குமாறும், எரிபொருள் விலையிலும் மாற்றத்தை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியும் தேசிய மக்கள் சக்தி, மக்களோடு இணைந்து ஹட்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டது.

ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெற்ற இந்த போராட்டத்தில், எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் பங்கேற்றிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிடுகையில், ‘கொரோனா வைரஸ் உட்பட மேலும் பல பிரச்சினைகளால் மக்கள் வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாமல் திண்டாடுகின்றனர். இந்நிலையில் நிவாரணங்களை வழங்குவதற்கு பதிலாக மனிதநேயமற்ற இந்த அரசாங்கம் பொருட்களின் விலைகளை தொடர்ச்சியாக உயர்த்தி வருகின்றது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். உடன் குறைக்குமாறும் வலியுறுத்துகின்றோம்.

அதேபோல் உலக சந்தையின் எரிபொருட்களின் விலையும் கடந்த காலத்தில் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்தது. தற்போதும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது. ஆனால், அரசாங்கம் எரிபொருள் விலையைக்கூட குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மக்கள் நலன் மறந்து செயற்படும் இந்த அரசாங்கத்துக்கு தக்க பாடம் புகட்டவேண்டும்’ என்று தெரிவித்தனர்.

இதன்போது, பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதைதாகளையும் ஏந்தியவாறு அரசாங்கத்துக்கு எதிராக போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.