தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆதரவு
தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கவும் தமிழரது பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கவும் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பூரண ஆதரவு வழங்கவுள்ளதாக ஈரோஸ் ஜனநாயக முன்னணி அறிவித்துள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது நிலைப்பாடு தொடர்பாக ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் இ. சிறி இராஜராஜேந்திரா ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில், தழிழர் பிரதிநிதித்துவங்களை பாதுகாக்க தமிழ் பிரதிநிதிகளை பாராளுமன்றம் அனுப்புவது தமிழ் பேசும் மக்களின் பொறுப்பாகும். இலங்கை பாராளுமன்றம் இனவாத அடிப்படையிலே கட்டமைக்கப்பட்டிருப்பதால் அதன் முக்கிய அரசியல் தீர்மானங்களும் முடிவுகளும் இனவாத கட்டமைப்பை பலப்படுத்துவதையே உறுதிசெய்யும். கடந்த காலங்களில் பாரளுமன்றத்தினால் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் இதனையே உறுதி செய்துள்ளது.
இந்நிலையில் இதனை எதிர்த்து அரசியல் முன்னெடுப்புக்களை பாராளுமன்றத்திலோ சர்வதேசத்திலோ பேசக்கூடிய மக்களால் இனங்காணப்பட்ட சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது. விமர்சனங்களுக்கப்பால் அனைத்து தழிழ் தரப்புக்களும் விட்டுக்கொடுப்புக்களுடன் ஐக்கியமாவதுடன் அனைத்து தமிழ் பேசும் மக்களும் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து அதனை பலப்படுத்துவதே இன்றைய தேவையாகவுள்ளது’ எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை