ரவி மற்றும் ரிஷாட் மீதான விசாரணையை ஒத்திவைக்க தேர்தல்கள் ஆணைக்குழு சி.ஐ.டி.யிடம் கோரிக்கை

முன்னாள் அமைச்சர்கள் ரிஷாட் பதியுதீன் மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் மீதான விசாரணையை தேர்தல் நிறைவடையும் வரை ஒத்திவைக்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தேர்தலின்போது விசாரணைகள் தொடங்கப்படுகின்றன, அதற்கான காரணங்கள் குறித்து சந்தேகம் உள்ளது எனவே வாக்கெடுப்பு முடியும்வரை விசாரணையை ஒத்திவைக்க ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது என அதன் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூல் கூறியுள்ளார்.

தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் நீண்டகாலம்காக விசாரணைகளில் இருந்த முக்கிய வழக்குக்கள் கைவிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், தேர்தல் செயல்முறைகளில் இந்த விசாரணைகளின் தலையீட்டை உணர்ந்து, தேர்தல் முடிவடையும் வரை விசாரணைகள் ஒத்திவைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீதான விசாரணையில் ஏன் திடீர் ஆர்வம் காட்டுகின்றனர் என தெரிவித்த ரட்ணஜீவன் ஹூல், தேர்தல் நடைபெற 2 வாரங்களே உள்ள நிலையில் 15 மாதங்களுக்குப் பின்னர் ஏன் இந்த விசாரணை தொடங்கப்படுகிறது என கேள்வியெழுப்பியதோடு 15 மாதங்கள் காத்திருந்த பொலிஸாரால் ஏன் இன்னும் இரண்டு வாரங்கள் காத்திருக்க முடியாது என்றும் கேள்வியெழுப்பினார்.

ஜூலை 17 அன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், கட்சித் தலைவர்கள் கூடியிருந்த நிலையில் ஆணைக்குழு இந்த விடயத்தை தெரிவித்தது. பசில் ராஜபக்ஷ உட்பட பல உயர்மட்ட அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது ஆணைக்குழுவின் நிலைப்பாடு சரியானது என்று அவர்கள் ஒருமனதாக ஒப்புக்கொண்டனர் எனவே உடனடியாக பொதுத் தேர்தல் முடியும் வரை விசாரணையை ஒத்திவைக்குமாறு கேட்டு தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், பொலிஸாருக்கு இவ்வாறு கடிதம் அனுப்பப்பட்ட போதிலும், விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், முன்னாள் அமைச்சர்கள் வாக்குமூலம் வழங்க வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் ரட்ணஜீவன் ஹூல் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.