கூட்டமைப்பின் பலமே தமிழ் மக்களின் பலம்! – முன்னாள் எம்.பி. சரவணபவன் தெரிவிப்பு

“தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கும் வாக்குகள் கூட்டமைப்பைப் பலப்படுத்தும். கூட்டமைப்பு பலம் பெற்றால் அதுவே தமிழர்களின் பலமாகவும் அமையும்”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார்.

மந்துவில் கிழக்கில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எதிர்வரும் பொதுத் தேர்தலில் சுயேட்சைக் குழுக்கள், கட்சிகள் என்று சுமார் 33 தரப்பினர் போட்டியிடுகின்றனர். அதில் கூட்டமைப்பைத் தவிர்த்தால் ஏனைய 32 தரப்புக்களில் சுமார் 320 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்கள் அனைவரினதும் இலக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மழுங்கடிப்பதே.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்தது என்று இன்று பலர் கேட்கின்றனர். அவர்களிடம் நான் கேட்கின்றேன் ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற செய்யவில்லை?’. வடக்கில் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 52 ஆயிரம் மில்லியன் பெறுமதியான அபிவிருத்திப் பணிகளை நாம் மேற்கொண்டுள்ளோம்

2015ஆம் ஆண்டு நாடாளுமன்றம் செல்லும்போது வலிகாமம் வடக்கில் 7 ஆயிரம் ஏக்கர் காணி அரசால் கையகப்படுத்தப்பட்டது. பாதுகாப்புத் தேவைகளுக்காக இந்த ஏழாயிரம் ஏக்கரும் தேவையென்று தெரிவித்தனர். எனினும், நாம் விடவில்லை. தொடர்ச்சியாக வாதாடினோம். 4 ஆயிரம் ஏக்கர்களை விடுவித்துள்ளோம். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருக்காவிட்டால் ஆயிரத்து ஐநூறு ஏக்கர்களை மேலதிகமாக விடுவிக்க நடவடிக்கை எடுத்திருப்போம்.

நாம் நாடாளுமன்றம் செல்லும்போது 227 அரசியல் கைதிகள் இருந்தார்கள். இப்போது 91 கைதிகள் இருக்கிறார்கள். எவருடைய முயற்சியால் இவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். எத்தனையோ வருடங்கள் சிறையில் இருந்தவர்களை நாம் விடுவித்தோம். பலம் மிக்க அமைப்பாக கூட்டமைப்பு இருந்தபடியால் எமது கோரிக்கை செவிசாய்க்கப்பட்டது.

இதற்கப்பால் எத்தனையோ வேலைகள் நடைபெற்றன. சர்வதேச சமூகத்துடன் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. சர்வதேச சமூகம் தமிழர்கள் பிரதிநிதிகளாக அங்கீகரித்ததும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத்தான். டக்ளஸையோ அங்கஜனையோ அல்லது விஜயகலாவையோ தமிழர்களின் பிரதிநிதிகளாக சர்வதேச சமூகம் ஏற்கவில்லை.

இன்று எங்களை இந்த நிலைக்குக் கொண்டுவந்தது யார்?. தொடக்கியது ஐக்கிய தேசியக் கட்சி. முடித்து வைத்தது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி. ஆனால் அது பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது. பெரும்பான்மை இனம் என்றைக்கும் ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கும். எங்களிடம் வந்து வாக்குக்கேட்க அவர்களுக்கு உரிமையில்லை.

வெற்றிவிழா கொண்டாடிய ராஜபக்ச மண்ணை முத்தமிட்டதை கண்ணால் கண்டோம். வெற்றி விழா கொண்டாடும்போது தமிழர்கள் மனம் எவ்வளவு புண்படும் என்று அவர் நினைத்தாரா?. இது ஒன்று போதாதா அவர்களைப் புரிந்துகொள்ள. வெற்றிவிழாக்குப் பின்னர் பல வாக்குறுதிகளை சர்வதேச சமூகத்துக்கு மஹிந்த கொடுத்தார். இந்தியாவுக்கும் கொடுத்தார். ஆனால், அவற்றில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை.
தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும் என்று மஹிந்த கேட்கின்றார். எதற்காகக் கேட்கின்றார். அவரின் நோக்கம் 19ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாது ஒழிப்பதுதான். அவ்வாறு மூன்றில் இரண்டு கிடைத்தால் ஒரு போலி அரசமைப்பையும் மஹிந்த தயாரிப்பார். அதன்மூலம் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாக அவர் சர்வதேசத்துக்குக் காட்டிக்கொள்வார்.

திருகோணமலை மாவட்டம் இன்று எங்கள் கையை விட்டு போய்க்கொண்டு இருக்கின்றது. ஒரு சிங்களவர் இல்லாத இடங்களில்கூட விகாரைகள் கட்டப்படுகின்றன. இதே நிலைமை யாழ்ப்பாணத்திலும் இடம்பெறலாம். நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கும் வாக்குகள் கூட்டமைப்பைப் பலப்படுத்தும். கூட்டமைப்பு பலம் பெற்றால் அதுவே தமிழர்களின் பலமாகவும் அமையும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.