நாட்டில் இன்றும் கன மழைக்கு வாய்ப்பு – 5 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பரவலாக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில், பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேநேரம் மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதோடு, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, கொழும்பு, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை இன்று பிற்பகல் ஒரு மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பெய்த கனமழையைத் தொடர்ந்து தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று காலை 9 மணிமுதல் இன்று காலை 9 மணி வரை குறித்த மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை