வர்த்தமானி அறிவித்தல் கொரோனாவைக் கட்டுப்படுத்த பயனாக அமையாது – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

சுகாதார அமைச்சினால் தற்போது வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் ஒருபோதும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு பயனாக அமையாது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த அறிவித்தலின்படி மக்கள் ஒத்துழைத்தால் மாத்திரமே அதிகாரிகளால் எவ்வித நடவடிக்கையையும் முன்னெடுக்க முடியும் என அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படுவது 1981 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் அறிமுகப்படுத்தப்பட்ட தொற்று நோய் மற்றும் தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டமாகும். இந்த அதிகாரங்களை பரிசோதகர்களே நடைமுறைப்படுத்துவர்.

எனவே சட்டத்தின் அடிப்படையில் சுகாதார அமைச்சரினால், எமக்கு அந்த அதிகாரங்களை வழங்க முடியும். அவ்வாறில்லை என்றால் மக்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் நாம் ஈடுபட்டாலும் தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு எமது கட்டளைகளை சவாலுக்குட்படுத்த முடியாது.

சுகாதார அமைச்சோ அல்லது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமோ இதனை இதுவரையில் நிறைவேற்றவில்லை. அநாவசிய அதிகாரங்களை நாம் கோருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அவ்வாறு அநாவசியமான எவ்வித அதிகாரத்தையும் நாம் கோரவில்லை.

எமது அதிகாரங்களை சட்ட ரீதியானதாக உறுதிப்படுத்தும் வரை எம்மால் கடமைகளில் ஈடுபட முடியாது. அதிகாரங்களை பயன்படுத்தி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலானது மக்கள் ஒத்துழைத்தால் மாத்திரமே எவ்வித செயற்பாடுகளையும் முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.