மன்னார் கடலில் கடற்படையினரின் தாக்குதலில் மீனவர் படுகாயம்- மீனவர்கள் எதிர்ப்பு!
மன்னார் கடலில் வைத்து கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலின் காரணமாக மீனவர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மன்னார், பிரதான பாலத்திற்கு அருகில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள் சிலர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதையடுத்து சிறிது நேரம் மன்னார் பாலத்தடி கடற்கரையில் மீனவர்கள் ஒன்று திறண்டு தமது கண்டனத்தை தெரிவித்தனர்.
இதுகுறித்து தெரியவருவதாவது, மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் உள்ள கடற்படை காவலரனில் இன்று காலை மீனவர்கள் தொழிலுக்குச் செல்லும் தமது ஆவணங்களைச் சமர்ப்பித்து உரிய அனுமதியுடன் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் தொழிலுக்குச் சென்ற படகு ஒன்றை கடலில் வைத்து இடை மறித்த சிவில் உடையில் இருந்த கடற்படையினர் ஆவணப் பரிசீலினைக்காக ஆவணங்களைக் கோரியுள்ளனர். இந்நிலையில் ஆவணங்களை வழங்குவதற்கு முன்னரே கடற்படையினர் குறித்த படகில் இருந்த மீனவர்கள் மீது கடுமையாக தாக்கியுள்ளனர்.
தாக்குதல்களுக்கு உள்ளான மீனவர்கள் சக மீனவர்களுக்கு தகவல் வழங்கியதோடு கடற்கரைக்குத் திரும்பினர். பின்னர் கடும் காயங்களுக்கு உள்ளான மீனவர் ஒருவர் உடனடியாக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து மீனவர்கள் கடற்கரையில் ஒன்று கூடி தமது எதிர்ப்பை தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற மன்னார் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மீனவர்களுடன் கலந்துரையாடினார்.
தொடர்சியாக மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் போது மன்னார் பிரதான பாலத்தில் இருந்து மீன் பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பகுதி வரை சுமார் மூன்று இடங்களில் தாங்கள் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் இதனால் தங்களால் உரிய நேரத்தில் மீன் பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளதாகவும் மீனவர்கள் பொறுப்பதிகாரியிடம் தெரிவித்தனர்.
மேலும், இன்று வழமைபோல் கடற்தொழிலுக்குச் சென்ற நிலையில் கடல் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் தங்களை முழங்காலில் இருக்கவைத்து தடிகளால் அடித்ததாகவும், துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன், இன்று தாங்கள் இரண்டு படகுகளில் கடலுக்குச் சென்றதாகவும் ஆவணக்களை சரிபார்த்து ஒழுங்குபடுத்த இரு படகுகளையும் ஒன்றாக இணைத்து ஆவணங்களை சரிப்படுத்திப் கொண்டதாகவுத் தெரிவித்த மீனவர்கள், இதனைப் பார்த்த கடற்படையினரே தங்களை சந்தேகப்பட்டு கடுமையாக தாக்கியதாகவும் தெரிவித்தனர்.
பொலிஸ் அதிகாரியுடனான கலந்துரையாடலின் பின்னர் சுமூக நிலை ஏற்பட்டதுடன் கடற்படையினரினால் தாக்கப்பட்டமை தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களால் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை