பொது சுகாதார பரிசோதகர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்கிறது

பொது சுகாதார பரிசோதகர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமது கடமையை ஆற்றக்கூடிய வகையில், சட்ட பின்புலத்தை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியே அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், தமது பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு மேலும் 18 தொழிற்சங்கங்கள் ஆதரவு வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

தொற்றுநோய் மற்றும் தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஏற்கனவே பொது சுகாதார பரிசோதகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் சுகாதார அமைச்சினால் இல்லாமலாக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், பொதுத்தேர்தல் காலப்பகுதியில் பின்பற்ற வேண்டிய சுகாதார ஒழுங்கு விதிகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அண்மையில் வெளியிடப்பட்டது.

எனினும் அதனை நடைமுறைப்படுத்தும்போது பொது சுகாதார பரிசோதகர்களுக்கு சட்ட ரீதியான அதிகாரம் வழங்கப்படவில்லை என தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.

இதனையடுத்து, இந்த விடயங்களை அடிப்படையாகக்கொண்டு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, கடந்த 19ஆம் திகதி முதல் டெங்கு காய்ச்சல் மற்றும் எலிக்காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுநோய்களை கட்டுப்படுத்துவதுடன் தொடர்புடைய அனைத்து கடமைகளிலிருந்தும் அவர்கள் விலகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.