பௌத்தத்தின் நிலை கவலையளிக்கிறது: ‘இரத்த ஆறு ஓடும்’ என்ற தேரர்களின் கருத்து குறித்து சுமந்திரன்
சமாதானத்தின் உச்ச நிலையாக உள்ள பௌத்த சமயத் துறவிகள் ‘இரத்த ஆறு ஓடும்’ என்று கூறியுள்ளதன் மூலம் நாட்டில் பௌத்தம் எந்த நிலைக்குப் போய்விட்டது என்பதை எண்ணி கவலையடைவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில், இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழர்கள் சமஷ்டியை கோரினால் வடக்கு, கிழக்கில் ‘இரத்த ஆறு ஓடும்’ என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இத்தானந்தே சுகத தேரர், கலாநிதி ஓமல்பே சோபித தேரர் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.
அத்துடன், சமஷ்டி அடிப்படையிலான தன்னாட்சியே தீர்வு எனத் தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ள நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர்கள், அரசாங்கம் வழங்கும் தீர்வை ஏற்றுக்கொண்டு தமிழர்கள் பேசாமல் அமைதியாக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள எம்.ஏ.சுமந்திரன், “நாங்கள் தனிநாடு கேட்கவில்லை. இந்தக் கருத்துக்கள் தேவையற்றவை.
பௌத்த சமயம் சமாதானத்தின் உச்ச நிலையயை அடையும் சமயமாகத்தான் நாங்கம் அறிந்திருக்கிறோம். அதனைப் போற்றுகின்றோம். ஒரு உயிரைக்கூட கொல்லுவது தவறு என்றும் அது பூச்சி, புளுவாக இருந்தாலும் கொல்லக்கூடாது எனவும் கூறுகின்ற சமயம்.
அதைப் பின்பற்றுகின்றவர்களாக, துறவிகளாக இருக்கின்றவர்கள் ‘இரத்த ஆறு ஓடும்’ என்று எச்சரிக்கிற அளவில் இருக்கின்றதென்றால் இந்த நாட்டில் பௌத்தம் எந்த நிலைக்குப் போய்விட்டது என்பதை நினைக்கும்போது கவலையாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை