தமிழர் அரசியலில் ஒற்றுமை இல்லை – மன்னார் ஆயர் கவலை
தமிழ் அரசியல் நிலைமை இன்னும் குழப்பமானதாக உள்ளது. முன்பு ஓரளவுக்கேனும் இருந்த ஒற்றுமை நிலைமை இன்று இல்லாது போய் விட்டது என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களாகிய நமக்கு இன்று இருக்கக்கூடிய ஒரேயொரு ஆயுதம் நமது வாக்குச் சீட்டுத்தான். எனவே அதை நாம் முறையாகப் பயன்படுத்தி தகுதியான பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். இது விடயத்தில் நாம் அலட்சியமாக இருக்கக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மன்னார் மறைமாவட்ட ஆயர், மறைமாவட்ட இறைமக்களுக்கு எழுதும் மேய்ப்புப்பணித் திருமடலில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த திருமடலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ‘ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நாம் மீண்டும் ஒரு பொதுத் தேர்தலைச் சந்திக்கின்றோம். ‘கொரோனா’ வைரஸ் நோயின் தாக்கமும், அச்சமும் நிறைந்த இக்கால கட்டத்தில் இந்தத் தேர்தல் நம்மை நோக்கி வருகின்றது.
இன்றைய எமது அரசியல் சூழ்நிலை, தமிழ்த்தேசியத்தின் அடிப்படைகள், தீர்க்கப்படாத தொடரும் பிரச்சினைகள், ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்துவதன் அவசியம், வேட்பாளர்களை எப்படி இனங்காண்பது, எப்படிப்பட்ட பிரதிநிதிகளை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் போன்றவை குறித்து சில சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.
இன்று உலகில் பெரும்பாலான நாடுகளில் ஜனநாயக ஆட்சிமுறை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் கிறிஸ்தவர்கள் தம் நாட்டு அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாக அல்லது அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொண்டவர்களாக இருக்க முடியாது. மாறாது பொறுப்புள்ள குடிமக்கள் என்ற வகையில் தமது அரசியல் கடமைகளை தவறாது நிறைவாக ஆற்றவேண்டும்.
அரசியல் புனிதமானது. ஆனால் தவறானவர்கள் அதற்குள் நுழைவதனால் அது சிலவேளை சாக்கடையாகின்றது. இந்தப் புனிதமான அரசியலில் எல்லா மக்களைப்போல கிறிஸ்தவர்களும் ஈடுபடவேண்டும் எனத் திருச்சபை விரும்புகின்றது, ஊக்குவிக்கின்றது. அதேவேளை மிக முக்கியமான, மிக அவசியமான சூழ்நிலையில் அன்றி பொதுவாகத் திருச்சபை கட்சி அரசியலில் ஈடுபடுவதில்லை.
இன்றைய எமது சூழ்நிலை
இன்றைய எமது நாட்டு அரசியல் சூழ்நிலை மிகவும் சிக்கலானதாக உள்ளது. பெரும்பான்மை மக்களின் நலன்களை முதன்மைப்படுத்தும் அரசியல் தலைமையே இன்று நாட்டில் காணப்படுகின்றது.
தமிழ் அரசியல் நிலமை இன்னும் குழப்பமானதாக உள்ளது. முன்பு ஓரளவுக்கேனும் இருந்த ஒற்றுமை நிலைமை இன்று இல்லாது போய்விட்டது. உதாரணமாக வன்னித் தேர்தல் நிலமையை எடுத்துக்கொண்டால் வரலாற்றில் என்றுமில்லாதவாறு ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கு 45 கட்சிகளைச் சேர்ந்த 405 உறுப்பினர்கள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
தமிழர் அரசியல் எந்தளவுக்கு சிதறிச் சின்னாபின்னமாகி இருக்கிறது என்பது இதிலிருந்து புலனாகின்றது. ஒரு ஜனநாயக நாட்டில் யாரும் போட்டியிடலாம், எத்தனை பேரும் போட்டியிடலாம் என்ற நிலைப்பாடு இருந்தாலும் தமிழர் அரசியல் பலம் சிதறிடிக்கப்பட்டுள்ளது என்பது இத்தேர்தலில் வெள்ளிடை மலை.
இந்நிலையில் இத்தேர்தலில் நமது நிலைப்பாடு என்ன என்பது முக்கியமான கேள்வி. காலத்திற்குக் காலம் அரசியல் சூழ்நிலைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இன்றைய அரசியல் சூழ்நிலையை நாம் நின்று நிதானித்து சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
தமிழ்த்தேசியத்தின் அடிப்படைகள் சுயாட்சி, சுயநிர்ணயம், தமிழர் தாயகம், மொழியுரிமை போன்ற தமிழ்த்தேசியத்தின் அடிப்படைகள் என்றும் மாறாதவை, எந்தவித விட்டுக்கொடுப்புக்கோ சமரசத்திற்கோ உள்ளாக்கப்படமுடியாதவை. இவற்றை முன்னிலைப்படுத்தியே பல சகாப்தங்களாக அகிம்சைப்போராட்டத்தையும் ஆயுதப்போராட்டத்தையும் தமிழ் மக்கள் முன்னெடுத்து வந்துள்ளனர்.
இவற்றை வென்;றெடுக்கவே பல ஆயிரம் உயிர்களையும், உடைமைகளையும் இழந்துள்ளோம். இன்னும் பல்வேறு இழப்புக்களைச் சந்தித்துள்ளோம். எனவே தமிழ்த்தேசியத்திற்கு அப்பாற்பட்ட கொள்கையுடையவர்களை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்களாகிய நமக்கு நமது உரிமைகள் முக்கியமா அல்லது சலுகைகள் முக்கியமா என்றால் முதலில் நமது உரிமைகள் நமக்கு முக்கியம். அத்தோடு நாம் நின்று விடமுடியாது.
நமது அடிப்படைத் தேவைகளும் இன்னும் நமது மக்களுக்கான அபிவிருத்திகளும் நமக்குத் தேவை. இவை இரண்டிற்குமான நமது அரசியல் போராட்டம் சமாந்தரமாகச் செல்ல வேண்டும். ஒன்றிற்காக ஒன்றை நாம் விட்டுக்கொடுக்க முடியாது.
தீர்க்கப்படாத தொடரும் பிரச்சினைகள்
இந்த நாட்டில் தமிழ் மக்களின் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் தொடர்கதையாகவே உள்ளன. அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை, முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு, யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு, நிலைமாறுகால நீதி போன்றவை அவசரமாகத் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகளாகும்.
இவற்றை முன்னிலைப்படுத்தி ஓங்கிக் குரல்கொடுக்கக்கூடியவர்கள், அக்கறையோடு துணிவோடு செயலாற்றக்கூடியவர்களை நாம் தெரிவுசெய்யவேண்டும். நமது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துவோம்.
நமது ஜனநாயக உரிமைகள் மட்டில் நாம் மிகவும் விழிப்போடு இருக்க வேண்டும். தேர்தலில் வாக்களிப்பது நமது உரிமையும் கடமையும் ஆகும். நமது இந்தப் புனிதமான ஜனநாயக உரிமையை நாம் விட்டுக்கொடுக்கவோ அல்லது நமது இந்த ஜனநாயகக் கடமையை உதாசீனம் செய்யவோ கூடாது.
தமிழ் மக்களாகிய நமக்கு இன்று இருக்கக்கூடிய ஒரேயொரு ஆயுதம் நமது வாக்குச் சீட்டுத்தான். எனவே அதை நாம் முறையாகப் பயன்படுத்தி தகுதியான பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். இது விடயத்தில் நாம் அலட்சியமாக இருக்கக்கூடாது.
சரியானவர்களையும் தவறானவர்களையும் இனங்காண்போம் இரண்டாம் வத்திக்கான் சங்கம் கண்டனத்திற்குரிய ஆட்சிமுறை குறித்துப் பேசுகின்றது. ‘கண்டனத்திற்குரிய அரசியல் ஆட்சிமுறைகள் சிலவிடங்களில் இருந்துகொண்டுதான் வருகின்றன. இவை குடிமை உரிமைக்கு அல்லது சமயச் சுதந்திரத்திற்கு தடை போடுகின்றன.
அரசியல் ஆதாயம் சார்ந்த, கட்டுக்கடங்காப் பேராசைக்கும் இழி;செயலுக்கும் பலரைப் பலியாக்குகின்றன. அதிகாரத்தைப் பொதுநலனுக்கெனப் பயன்படுத்தாமல் ஒருசில குறிப்பிட்ட பிரிவினருடைய அல்லது ஆட்சியாளர்களுடைய வசதிக்கெனவே திரித்துவிடுகின்றன’ (இன்றைய உலகில் திருச்சபை எண். 73). இத்தகைய சூழ்நிலை நமது நாட்டிலும் இல்லாமல் இல்லை. எனவே இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை நாம் சரியாக இனம்காண வேண்டும்.
யாரை ஆதரிப்பது? யாரை நிராகரிப்பது?
ஒவ்வொரு கட்சியினதும் சுயேட்சை வேட்பாளர்களினதும் தேர்தல் வாக்குறுதிகளை நாம் நுணுக்கமாகச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். மக்கள் நலன்சார்ந்த, பொதுநலன் சார்ந்த, சமய விழுமியங்களைக்கொண்ட தேர்தல் வாக்குறுகளை நாம் அடையாளம் காணவேண்டும். போலியான பொய்யான நடைமுறைச்சாத்தியமற்ற வாக்குறுதிகளோடு வரும் வேட்பாளர்களை நிராகரிப்போம்.
உண்மையான, நடைமுறைச்சாத்தியமான வாக்குறுதிகளோடு வரும் வேட்பாளர்களை ஆதரிப்போம். உண்மை, நேர்மை, சேவை மனப்பான்மை உள்ள வேட்பாளரை ஆதரிப்போம். பொய், புரளி சுயநல மனப்பான்மை கொண்ட வேட்பாளரை நிராகரிப்போம்.
மதத்துவேசம், இனத்துவேசம், மொழித்துவேசம் கொண்ட வேட்பாளர்களை நிராகரிப்போம், மதப்பற்றும், இனப்பற்றம், மொழிப்பற்றும் கொண்ட வேட்பாளர்களை ஆதரிப்போம். குழப்பவாதிகளையும், சந்தர்ப்பவாதிகளையும் நிராகரிப்போம். சமாதான விரும்பிகளையும், சமூக அக்கறை கொண்டவர்களையும் ஆதரிப்போம்.
அறிஞர் பேர்னாட் ஷோ கூறும் வார்த்தைகள் இவ்வேளையில் நினைவுகூரத்தக்கன: ‘வாக்காளர்கள் முட்டாள்களாக இருந்தால் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பாராளுமன்றத்திற்pகுச் செல்பவர்கள் அயோக்கியர்களாகத்தான் இருப்பார்கள்’ எனவே நமது யதார்த்த சூழ்நிலையை நுணுகி ஆராய்ந்து, நமது தனிப்பட்ட சுயநலன்களுக்கு அப்பால் நின்று, மனச்சாட்சியின் குரலுக்கு செவிமடுத்து இத்தேர்தலைச் சந்திப்போம், நமது வாக்குரிமையைப் பயன்படுத்துவோம்.
இலங்கை நாட்டின் திருத்தூதரான தூய யோசவ்வாஸ் அடிகளாரின் பரிந்துரை நமக்குக் கிடைப்பதாக! நமது மறைமாவட்டத்தின் பாதுகாவலியாகிய மடு அன்னை நம்மோடு பிரசன்னமாக இருந்து தாய்க்குரிய பாசத்தோடு நம்மை வழிநடத்துவாராக’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை