‘சமூகப் பிரச்சனைகளை தீர்க்காது தேர்தல் காலத்தில் வீரவசனம் பேசுவோர் நிராகரிக்கப்பட வேண்டும்’ – ரிஷாட்

அதிகாரங்கள் இருந்த போது சமூகப் பிரச்சினைகளை பிரச்சினைகளாகவே வைத்திருந்துவிட்டு, தேர்தல் காலத்தில் மட்டும் அதே பிரச்சினைகளை தீர்த்துத் தருவதாகக் கூறி வாக்குக் கேட்பவர்களை நிராகரிக்க வேண்டுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில், மக்கள் காங்கிரஸ் சார்பில், போட்டியிடும் வேட்பாளர் மாஹிரை ஆதரித்து, சம்மாந்துறையில் அண்மையில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து பேசிய ரிஷாட், ‘கடந்த காலங்களில், நீண்ட காலமாக அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள், சமூகப் பிரச்சினைகளை வென்றெடுப்பதற்காக, எந்தவிதமான ஆக்கபூர்வமா நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. உருப்படியான எந்தத் திட்டத்தையும் முன்வைக்கவுமில்லை. ‘பிச்சைக்காரன் புண் போல’ பிரச்சினைகளை தீர்க்காமல் வைத்துவிட்டு, தேர்தல் காலங்களில் மட்டும் வீரவசனம் பேசி, மக்களை உசுப்பேற்றுகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் சமூகத்துக்குப் பிரச்சினைகள் வருகின்ற போது, அறிக்கை விடுவதற்கும், அதே இடங்களுக்குச் சென்று, தம்மை பிரசித்தப்படுத்திக் கொள்வதற்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேவையா? உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டும் போதுமா? எண்ணிக்கைகளை விட எண்ணங்களை உறுதி செய்து, மக்களின் பிரச்சினைகளை சரியாக கையாள்பவர்களையே நீங்கள் பிரதிநிதிகளாக்க வேண்டும்’ என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.