சிறிகொத்தவை கைப்பற்றுவது மாத்திரமே சிலரது குறிக்கோளாக காணப்படுகின்றது – மஹிந்த

சிறிகொத்தவை கைப்பற்றுவது மாத்திரமே ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் முக்கிய குறிக்கோளாக காணப்படுகின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நடைபெறவுள்ள தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி அதிகாரத்தை கேட்பது நாட்டில் எஞ்சியுள்ள வளங்களையும் விற்பனை செய்வதற்கே எனவும் பிரதமர் குறிப்பிட்டார். குண்டசாலை, பலகொல்ல பிரதேசத்தில் நேற்று   நடைபெற்ற சந்திப்பொன்றின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதமர், “சிறிகொத்தவை கைப்பற்றுவது மாத்திரமே ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் முக்கிய குறிக்கோளாக காணப்படுவதுடன், அவர்களுக்கு நாட்டை பாதுகாப்பதற்கோ, அபிவிருத்தி செய்வதற்கோ எவ்வித தேவையும் இல்லை என்றும் குறிப்பிட்டார். எனவே, மொட்டுடன் இணைந்து நாட்டை பாதுகாப்பதற்கும், நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் ஒன்றிணையுமாறு ஐக்கிய தேசிய கட்சியினருக்கு அழைப்பு விடுப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

யாருடைய தேசதுரோக நிபந்தனைகளுக்கும் அடிபணியாது பலம் வாய்ந்த அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டுமாயின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அவசியம் என்றும், நாட்டிற்காக மொட்டு கட்சியை ஆட்சியில் இருத்துவது மக்களின் கடமை எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

அனைத்து இனத்தவர்களுக்கும் வாழக்கூடிய விதத்தில் ஒன்றிணைந்த நாடொன்றை உருவாக்கக் கூடிய ஒரே கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாத்திரமே” என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.