சஜித்தைப்போன்று வடக்கில் ஒன்றும் தெற்கில் ஒன்றும் கூறுபவர் நான் அல்ல – மஹிந்த
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச போன்று தான் வடக்கிற்கு ஒன்றும் தெற்கிற்கு ஒன்றும் கூறும் தலைவரல்ல என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஹோமாகம பிரதேசத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கு பிரதேசத்தில் தெரிவிக்கும் கருத்துகளைவிட முற்றிலும் வேறுபட்ட கருத்துக்களையே தெற்கில் தெரிவித்து வருகிறார். வடக்கு கிழக்கை இணைத்து தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதாகவும் அவரது கருத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் சஜித் பிரேமதாச தெற்கு மக்களுக்கு தமது உண்மையான கொள்கையை மறைத்துள்ளார்.
இவ்வாறான இரட்டை கொள்கைகளை கொண்ட நபர்களை ஒருபோதும் நம்ப முடியாது. அதுவே ஐக்கிய தேசியக் கட்சியை இரண்டாக பிளவடையச் செய்வதற்கு காரணமாக அமைந்துள்ளது.
அன்று இராணுவத்தினர் இருந்திருக்காவிடின் இன்று இவ்வாறான தேர்தலொன்றை நடத்துவதற்கேனும் வாய்ப்பு கிடைத்திருக்காது.
பாரிய தியாகத்தை மேற்கொண்ட தேசத்தவர்கள் என்ற வகையில் இவ்வாறான இரண்டு விதமான கருத்துக்களை வெளியிடுவதை கண்டிக்க வேண்டும்.
தற்போது கோட்டாபய ராஜபக்ஷவுடன் பணியாற்றுவதற்கு முடியும் என அவர்கள் கூறினாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வேலைத்திட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டுசென்ற தலைவர்களே அந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு பொருத்தமான நபர்கள்” என மேலும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை