அரச ஊழியர்களின் சம்பள விவகாரம் – அமைச்சரவையின் தீர்மானம்
அரச ஊழியர்களின் சம்பள விடயத்தில் நிலவும் அனைத்துவித முரண்பாடுகளையும் தீர்க்கும் வகையில் முன்வைக்கப்பட்ட திட்டத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணணவர்தன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய அரசு ஊழியர்களது சகல சம்பள முரண்பாடுகளும் தேசிய சம்பளம் ஆணைக்குழுவுக்கு அனுப்பி அவற்றை அகற்றுவதற்காக ஒரு திட்டம் வகுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அமைச்சர் பந்துல இதைனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற 6 இலட்சம் பேருக்கு அக்ரஹாரா காப்பீட்டு நன்மைகளை வழங்கும் திட்டத்திற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதுடன், அதன் ஊடாக அனைத்து ஓய்வு பெற்ற சகல அரச ஊழியர்களுக்கும் அக்ரஹார காப்பீட்டு நன்மைகளை பெற முடியும் என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து நகரங்களில் உள்ள வைத்தியசாலைகளிலும் அக்ரஹார காப்பீட்டு நன்மைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் அரசு ஊழியர்களுக்கான சிறப்பு பிரிவுகளை அமைக்கும் திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை வழங்கியதாகவும் அமைச்சர் பந்துல குணணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை