ஜனாதிபதி நேரில் தலையிட்டு உடன் தீர்வு வழங்க வேண்டும் – இன்று கூடுகின்றதுபொது சுகாதாரப் பரிசோதகர் சங்க நிறைவேற்றுக் குழு…

– இன்று கூடுகின்றது பொது சுகாதாரப் பரிசோதகர் சங்க நிறைவேற்றுக் குழு

பொது சுகாதாரப் பரிசோதகர்களின் பணிப்புறக்கணிப்பு ஒரு வாரமாகத் தொடர்கின்ற நிலையில் சுகாதார அமைச்சிடமிருந்து முறையான பதில் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராய இன்று கொழும்பில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு கூடி தீர்மானிக்கவுள்ளது எனச் சங்கத்தின் உப தலைவர் சரவணபவன் தெரித்தார்.

அத்தோடு தமது கோரிக்கைகளுக்கான பதிலை வழங்குவதில் சுகாதார அமைச்சு அசமந்தப்போக்குடன் செயற்படுவதால், பிரச்சினை மேலும் பெரிதாவதற்கு முன்னர் ஜனாதிபதி இவ்விடயத்தில் நேரடியாகத் தலையிட வேண்டும் என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“எமக்கு பிறிதொரு தொழிற்சங்கத்துடன் போராட்டம் இல்லை. இது கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாட்டையும் அப்பாவிப் பொதுமக்களையும் பாதுகாப்பதற்கான போராட்டமாகும். இந்தப் போராட்டத்துக்குத் தேவையான சட்டம், அதிகாரங்கள் என்பவற்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு சுகாதார அமைச்சு நேரடியாகவோ அல்லது வேறு முறையிலேனும் எவ்வித நடவடிக்கையையும் எடுக்காமைக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றோம்.

இந்தப் பிரச்சினை மேலும் பெரிதாவதற்கு முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலையிட்டு எமக்கான தீர்வை வழங்க வேண்டும். எமக்கு வேறு எந்தவொரு சங்கத்துடனும் எவ்வித முரண்பாடும் இல்லை என்பதைத்  தெரியப்படுத்துகின்றோம்.

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்காக பொது சுகாதாரப் பரிசோதகர்களால் முன்னெடுக்கப்படும் அர்ப்பணிப்பான சேவையில் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் சதிச் செயல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. மக்கள் மத்தியிலும் பொது சுகாதார பரிசோதகர்களின் சேவையை பாதிப்படையச் செய்வதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன” – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.