நம்மைச் சூழ்ந்து வரும் பேராபத்தை முறியடிக்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே வாக்களிப்போம்: வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அறைகூவல்
வவுனியா நிருபர்
தமிழ் மக்களின் ஆணை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரப்புக்கு கிடைத்து விடக் கூடாது என்று ராஜபக்ச தரப்பினர் விரும்புகின்றனர். பயப்படுகின்றனர். சர்வதேச விசாரணையிலிருந்து தப்பித்து தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், நாட்டுக்குள் உள்ளக விசாரணையை நடைமுறைப்படுத்தவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உதவியை ராஜபக்ஸ தரப்பினர் கேட்கின்றனர். அதற்காக கூட்டமைப்பை வெல்ல வைக்கப் பாடுபடுகின்றனர். ஆகவே நம்மைச் சூழ்ந்து வரும் பேராபத்தை முறியடிக்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே வாக்களிப்போம் என வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு தெரிவித்துள்ளது.
பிரஜைகள் குழுவின் தலைவர் கோ.ராஜ்குமார், செயலாளர் தி.நவராஜ், ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா ஆகியோர் இணைந்து இன்று உத்தியோகபூர்வமாக அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் முழுவிவரமும் வருமாறு:
இப்போதும் தமிழ்த் தேசிய அரசியல் களத்தில் சத்தமே இல்லாத ஒரு பெரும் இனவழிப்பு போர் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. தமிழ்த் தேசிய இனத்துக்கென்றே உரித்தான இனத்துவ அடையாளங்களை பௌத்த சிங்களப் பெருந் தேசியவாதத்துக்குள் கரைத்து காணாமல் ஆக்கி விடும் தரித்திரப் போரை நடத்திக் கொண்டிருக்கிறது இலங்கை தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்தில் போட்டியிடும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. தண்ணீருக்கு உள்ளால் நெருப்பை அணைய விடாமல் கொண்டு போய் கரை சேர்ப்பது எவ்வளவுக்கு எவ்வளவு கடினம் ஆனதோ? அந்தளவுக்கு அந்தளவு கடினமான இந்தப் போரை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழர் தேசம் எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும். தண்ணீருக்கு உள்ளால் விடுதலை நெருப்பை அணைய விடாமல் கொண்டு போய்க் கரை சேர்ப்பித்து அடுத்த தலைமுறைப் பிள்ளைகளிடம் கையளித்து விட்டாலே போதுமானது. இந்த தேசியப் பெரும் பணியை சளைக்காமல்இ தொய்வுறாமல் செய்து கொண்டிருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கரங்களை தமிழ் மக்கள் பலப்படுத்த வேண்டும்.
‘நாங்கள் தமிழர்களாக அல்ல, இலங்கையர்களாகவே வாழ விரும்புகிறோம். எங்களுக்கு சமஸ்டி அதிகாரம் வேண்டாம். நாங்கள் சிறீலங்காவின் ஒற்றையாட்சி அதிகாரக் கட்டமைப்புக்குள் பௌத்த மதத்தை முதன்மை மதமாக ஏற்றுக் கொண்டு சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ்வதையே பெருமையாகக் கருதுகிறோம். தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள். அவர்கள் ஆயுதம் தூக்கியதும் தவறு. அவர்களின் ஆயுதப் போராட்டமும் பிழையானது. நடைபெற்ற அழிவுகளுக்கு விடுதலைப் புலிகளே காரணம். அவர்களே போர்க் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறவும் வேண்டும். நாட்டைப் பிளவுபடுத்த முயற்சித்த விடுதலைப் புலிகளை அழித்து யுத்தத்தை வெற்றி கொண்ட மகிந்த ராஜபக்ஸ சகோதரர்களுக்கு வாழ்த்துகள்.’ இப்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிவரும் நிலையில், ‘இல்லை தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம். அவர்களுக்கு என்று ஒரு தேசம் உண்டு. அவர்கள் தனித் தமிழ் தேசமாக பிரிந்து போவதற்கு சகல உரித்துகளையும், இறைமையையும் கொண்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டமும் நியாயமானது. அவர்கள் பயங்கரவாதிகள் அல்லர், போராளிகள். எமது மக்களினதும் மண்ணினதும் பாதுகாவலர்கள்.’ என்று மறுத்து பதில் கூறி, நெஞ்சுரத்தோடும் நேர்மைத் திறனோடும் தமிழ் இனத்துக்கான விடுதலை அரசியலை முன்னெடுத்துச் செல்லும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கரங்களை இறுகப் பற்றி தமிழர் தேசம் மறுபடியும் எழுச்சி கொண்டு எழுந்து நடக்க வேண்டும். தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளான ஒரு தேசிய இனம். இப்போதும் நீதியைக் கேட்டு போராடிக் கொண்டிருக்கும் மக்கள். ஆகவே, நடைபெற்றுள்ள மாபெரும் தமிழ் இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியை தமிழ் மக்கள் பெற வேண்டுமாயின், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வெற்றியே அதனைச் சாத்தியமாக்கும்!
சிறீலங்கா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான தாமரை மொட்டுக் கட்சியே மத்தியில் (கொழும்பில்) ஆட்சி அமைக்கப் போகின்றது. எனவே தாங்கள் கையாளக்கூடிய, தமது அரசியல் தீர்மானங்களுக்கு ஒத்து இசைந்து போகக்கூடிய, ஒரு தரப்பே வடக்கு கிழக்கில் இம்முறை தேர்தலில் அதிக ஆசனங்களுடன் வெல்ல வேண்டும் என்று ராஜபக்ச குடும்பத்தினர் விரும்புகின்றனர். எனவே தமக்குப் பொருத்தமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தேர்தலில் வெல்ல வைக்க ராஜபக்சாக்கள் தம்மால் ஆன அனைத்து ஒத்தாசை, உதவிகளையும் வழங்குகின்றனர். இதற்காக குறித்த இரண்டு தரப்பும் ஏற்கனவே இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு இந்த விசயத்தில் இணக்கமும் கண்டுள்ளனர். இந்த இரகசிய பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே, தமிழ் மக்களை கூட்டமைப்புக்கு வாக்களிக்கச் செய்ய உற்சாகப்படுத்தும் வகையில், ஊக்குவிக்கும் வகையில் ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழீழம் கேட்குது. புலிகள் கேட்டதை விடவும் அதிகமான அதிகாரங்களை கூட்டமைப்பு கோருகிறது.’ என்று ராஜபக்ஸ தரப்பினர் கத்துகின்றனர். இப்படி ராஜபக்ஸ தரப்பினர் வெளியிட்ட அறிக்கைகள் எல்லாம் கூட்டமைப்பினர் எழுதிக் கொடுத்து ராஜபக்ச தரப்பினர் வாசித்த அறிக்கைகளே. தமிழ் மக்களின் வாக்குகளை கூட்டமைப்பின் பக்கம் ஈர்த்து திசை திருப்பி கூட்டமைப்பை வெல்ல வைக்க இரண்டு தரப்பும் கதைத்துப் பேசி நடக்கும் அலுவல்கள் இவை!
வடக்கு கிழக்கில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு (சைக்கிள் சின்னத்துக்கு) தமிழ் மக்கள் வாக்களித்து அரசியல் அதிகாரத்தை வழங்கினால், அவரும் அவரது கட்சியினரும் தமிழ் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை, போர்க் குற்றங்களுக்கு தண்டனை, அரசியல் தீர்வுக்கு பொதுசன வாக்கெடுப்பு வேண்டும் என்று சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் முறையிடுவார்கள். சிறீலங்கா அரசின் ஏமாற்று உள்ளக நீதி விசாரணைப் பொறிமுறையை முற்றாக நிராகரிப்பார்கள். இது கோத்தா அரசுக்கு அதிக அழுத்தங்களையும், நெருக்கடிகளையும் கொண்டு வரும். இன்றைய பூகோள அரசியல் சூழலில் ராஜபக்ஸ குடும்பத்தினரும், படைத்தளபதிகளும் தண்டிக்கப்படக் கூடிய காலம் கனிந்து வந்திருக்கிறது. இந்த தேர்தலும், இன்றைய உலக அரசியல் ஒழுங்கும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நல்லதொரு வாய்ப்பை தந்துள்ளது.
ஆகவே தான் தமிழ் மக்களின் ஆணை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரப்புக்கு கிடைத்து விடக் கூடாது என்று ராஜபக்ச தரப்பினர் விரும்புகின்றனர். பயப்படுகின்றனர். சர்வதேச விசாரணையிலிருந்து தப்பித்து தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், நாட்டுக்குள் உள்ளக விசாரணையை நடைமுறைப்படுத்தவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உதவியை ராஜபக்ஸ தரப்பினர் கேட்கின்றனர். அதற்காக கூட்டமைப்பை வெல்ல வைக்கப் பாடுபடுகின்றனர்.
இவர்களின் சூழ்ச்சிகளுக்குள் தமிழ் மக்கள் அகப்படாமல் கூட்டுத் துரோகங்களை முறியடித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே தமிழ் மக்கள் இம்முறை தேர்தலில் ஆணை வழங்க வேண்டும். தமிழ் மக்கள் வழங்கும் இந்த மக்கள் ஆணை, போர்க் குற்றவாளிகளான ராஜபக்ஸ குடும்பம் மற்றும் படைத்தரப்பை சர்வதேச நீதிமன்ற குற்றவாளிக் கூண்டில் ஏற்றும்! எனவே தமிழ் மக்கள் காலம் கடந்தாவது தமக்கான நீதியைப் பெற்றுக் கொள்ள மாவீர ஆத்மாக்களின் மீது இதை ஒரு சபதமாக ஏற்போம். திடமாக வெல்வோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோம்.
தலைவரின் வாழ்க்கை எமக்கு ஒரு வரலாற்று பாடம். அது தான் தமிழீழ மக்கள் எல்லோருக்கும் வழிகாட்டியாகவும் இருக்க முடியும். எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை பெரு நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.
கருத்துக்களேதுமில்லை