முஸ்லிம்களின் மத்தியில் ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி தேவை…

தேசிய காங்கிரஸும் அதனுடைய தலைமையும் இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு
தலைமைத்துவத்தை வழங்கி, எதிர்காலத்தில் அமையப் போகும் பொதுஜன பெரமுன ஆட்சியில்
இணைந்து செயற்படும் பங்காளிக் கட்சியாக அமையப் போகின்றது’ என சட்டம் ஒழுங்கு
அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளரும், தேசிய காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்ட
வேட்பாளருமான ஏ.எல்.எம். சலீம் தெரிவித்தார்.

நேர்காணல்: ஏ.மொஹமட் பாயிஸ்

கேள்வி: திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் பல கட்சிகள் போட்டியிடுகின்றன. இதில்
மக்களின் தெரிவு எப்படியிருக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

பதில்: சிங்கள மக்கள் மத்தியில் தேசிய ரீதியாக பொதுஜன பெரமுன பலம் வாய்ந்த
கட்சியாக இருப்பது போல் முஸ்லிம்கள் மத்தியில் சிறந்த தலைமைத்துவத்தைக் கொண்ட
பலம் வாய்ந்த கட்சியாக தேசிய காங்கிரஸ் காணப்படுகின்றது. மறுபுறத்தில்
எதிர்க்கட்சியான ஐ.தே.க இரண்டாகப் பிளவுபட்டு மக்கள் மத்தியில் நன்மதிப்பை
இழந்த கட்சிகளாக அவை காணப்படுகின்றன. தேசிய ரீதியான நிலைமை இவ்வாறு
காணப்படுகின்றது. அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்ற முஸ்லிம் கட்சிகளைப்
பொறுத்தவரை ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸைச்
சேர்ந்த வேட்பாளர்கள் மத்தியில் போட்டியும், ஆதரவாளர்கள் மத்தயில் குழப்பமும்
காணப்படுகின்றன. அதேபோன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் அதனுடைய
தலைமை தொடர்பிலும் பல குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன. இதனால் இந்தக்
கட்சிகள் மக்களிடத்தில் செல்வாக்கிழந்து காணப்படுகின்றன.

முஸ்லிம்கள் மத்தியில் ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மக்களின்
எதிர்பார்ப்புகளை எதிர்காலத்தில் நிறைவேற்றக் கூடிய கட்சியாக தேசிய காங்கிரஸ்
காணப்படுகின்றது. அம்பாறை மக்களின் தெரிவாக இந்தக் கட்சி இருக்கின்றது. இந்தத்
தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் 3 ஆசனங்களைப் பெறுவது மக்களால்
உறுதிப்படுத்தப்பட்டிருப்பதை மக்களின் ஆதரவை வைத்து தெரிந்து கொள்ளக் கூடியதாக
உள்ளது.

கேள்வி: பொதுத் தேர்தலில் அரசியல் பிரசாரங்கள் பலவாறாக முன்வைக்கப்பட்டு
வருகின்றன. இந்நிலையில் உங்களுடைய கட்சி நல்லிணக்க அரசியல் தொடர்பில் எவ்வாறான
நிலைப்பாட்டை முன்னெடுத்து வருகின்றது?

பதில்: இனவாத போலி அரசியல் பிரசாரக் கருத்துகள் மூலம் இனங்களுக்கிடையில்
விரிசலை முஸ்லிம் பெயர் தாங்கிய இரு கட்சிகளும் அம்பாறையில் ஏற்படுத்தியுள்ளன.
அந்த இடைவெளியை இல்லாமல் செய்து இன செளஜன்யத்தை ஏற்படுத்துவதற்கான பொறுப்பு
எமது தேசிய காங்கிரஸ் கட்சிக்கு இருக்கின்றது. அந்த அடிப்படையில்தான் எமது
தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட தேசிய ரீதியில் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தி
நாட்டிலுள்ள மூவினங்களும் ஒன்றித்து வாழக் கூடிய ஒரு சமூகம் ஏற்படுத்தப்பட
வேண்டும் என்பதை முதலாவது இலக்காகக் கொண்டு செயற்படுகின்றது. குறிப்பாக
முஸ்லிம் சமூகம் இழந்துள்ள அந்த நற்பெயரை மீண்டும் கொண்டு வருவதுடன்,
முஸ்லிம்களும் தேசத்திற்கு பங்களிப்புச் செய்யக் கூடியவர்கள் என்ற நம்பிக்கையை
ஏற்படுத்துவதனுடாக இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். அது ஒரு சவாலாகவும்
இருக்கின்றது. தேர்தலில் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அரசாங்கத்துக்கு
எதிராகவும், ஏனைய பகுதியினருக்கு எதிராகவும் சில கட்சிகள் இனவாதக் கருத்துகளை
முன்வைத்து அவர்களுடைய இலக்குகளை அடைய விரும்புகின்றன. அம்பாறை மாவட்டம் மூவின
மக்களும் செறிந்து வாழ்கின்ற முன்னுதாரணமான மாவட்டம். இந்த
மாவட்டத்திலிருந்துதான் இனசௌஜன்யம் வளர்க்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில்
அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றோம். அம்பாறை மாவட்ட மக்கள் தெளிவாக
இருக்கின்றார்கள். ஆளும் கட்சியோடு இணைந்து செல்லும் ஒரு கட்சியான தேசிய
காங்கிரஸை ஆதரிப்பதற்கு மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்.

கேள்வி: நீங்கள் ஆளும் கட்சியோடு இணைந்த கட்சியாக இருக்கும் நிலையில், அம்பாறை
மாவட்டத்தில் இந்த இரண்டு கட்சியும் தனித்துப் போட்டியிடுவதற்கான காரணம் என்ன?

பதில்: ஆரம்பத்தில் நாங்களும் கூட பொதுஜன பெரமுனவில்தான் போட்டியிடுவதாக
இருந்தது. இந்த மாவட்டத்தில் 3 பாராளுமன்ற உறுப்பினர்களை  பெறுவதற்கான
உரித்தும் தகுதியும் இருந்தன. ஆனால் அங்கு ஒரு உரிமை மறுப்பு இடம்பெற்றதால்
தேசிய காங்கிரஸ் தனியாக போட்டியிடுவதற்கு தீர்மானித்தது. தேசிய காங்கிரஸ்
மற்றும் பொதுஜன பெரமுன கட்சிகளுக்கிடையில் அவர்கள் தனித்தும் கேட்கலாம் அல்லது
சேர்ந்தும் கேட்கலாம் என்ற உடன்பாடு காணப்படுகின்றது. அதனால்தான் நாம்
தனித்துக் கேட்கின்றோம். தனியாகக் கேட்டாலும் கூட நாம் அரசின் பங்காளிக்
கட்சியாகத்தான் இருக்கின்றோம். சமூகத்தின் உரிமைகள், தேவைகள் சம்பந்தமாக
மிகவும் ஆணித்தரமாக அதனைப் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறையில்தான் தனித்தும்
கேட்கின்றோம். தனித்துக் கேட்கும் சந்தர்ப்பத்தில் எமது மக்களின் தேவைகள்
சம்பந்தமான கோரிக்கைகளை முன்வைத்து ஆளும் கட்சியோடு இணையவும் முடியும்.

ஆனால் தற்போது அந்தக் கட்சியில் அம்பாறை மாவட்டத்தில் இரு முஸ்லிம்களைப் போட
வேண்டும் என்பததற்காக போட்டிருக்கின்றார்கள். ஆளும் கட்சியின் பங்காளிக்
கட்சியான EPDP வடக்கில் தனியாக கேட்பது போல் அம்பாறையில் தேசியாக காங்கிரஸ்
தனியாக போட்டியிடுகின்றது. எதிர்காலத்தில் அமையப் போகும் பொதுஜன பெரமுன
ஆட்சியில் EPDP, CWC, NC போன்றன முக்கிய பங்காளிக் கட்சிகளாக இருக்கப்
போகின்றன.

கேள்வி: கல்முனை தொகுதியில் உங்களுடைய அரசியல் பிரவேசம் மூலம் என்ன மாற்றத்தை
ஏற்படுத்தவுள்ளீர்கள்?

பதில்: கல்முனை பிரதேசம் கடந்த 20 வருடங்களாக அபிவிருத்தியிலே பின்தங்கிக்
காணப்படுகின்றது. இளைஞர் தொழில்வாய்ப்புக்கள், மீன்பிடி, விவசாயம், வர்த்தகம்,
அரச துறை என எல்லா துறைகளைச் சார்ந்த பிரிவுகளிலும் பின்னடைவுகள்
காணப்படுகின்றன. கல்முனையில் மாற்றங்களை ஏற்படுத்த எமது தேர்தல்
விஞ்ஞாபனத்தில் பல விடயங்களை முன்வைத்திருக்கின்றோம். மறைந்த தலைவர் மர்ஹும்
எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களால் முன்மொழியப்பட்ட கல்முனை நகர அபிவிருத்தி
திட்டத்தை சமகால பிரச்சினைகளை உள்வாங்கி நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை
முன்னெடுக்க வேண்டும்.மர்ஹும் அஷ்ரஃப்   அந்தக் காலத்தில் கல்முனையை
அபிவிருத்தி செய்வதற்கான விடயங்களைக் கூறியிருக்கிறார். அந்தத் திட்டத்தின்
அடிப்படையில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே இனரீதியான முரண்பாடுகள் இல்லாமல்
சிறந்ததொரு நகர அபிவிருத்தி திட்டத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது.அதேபோன்று
கல்முனையில் புரையோடிப் போயுள்ள பிரச்சினையைப் பிற்சந்ததிக்கும் கொண்டு
செல்லாமல் கல்முனை பிரதேசத்தை நான்கு சபைகளில் மீதமான சபைகளான கல்முனை மாநகர
சபை, தமிழ் மக்களுக்கான நகர சபை மற்றும் மருதமுனையை அடிப்படையாகக் கொண்ட
சபையாகப் பிரித்து எதிர்வருகின்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர்
தீர்வு காணுதலும், சாய்ந்தமருதுக்கான வெளியிடப்பட்ட வர்த்தமானியை
உறுதிப்படுத்தி சபையை ஸ்தாபிப்பதற்கான கட்டுமான, ஆளணி ஏற்பாடுகளைச் செய்வதும்
எமது திட்டமாகும்.

கல்முனை தொகுதிலுள்ள பிரதேசங்கள் தங்களுடைய உள்ளுராட்சி அதிகாரம், அரசியல்
பிரதிநிதித்துவங்களை எதிர்பார்க்கின்றன. அதனடிப்படையில் அவர்களுக்கான அரசியல்
தலைமத்துவங்களை வழங்கி எதிர்காலத்தில் இந்தப் பிரதேசம் சிறந்த முறையிலே
அபிவிருத்தியை நோக்கிய ஒரு பயணத்தில் இணைய வேண்டும் என்ற அடிப்படையில்
திட்டமிட்டு வருகின்றோம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.