முன்னாள் போராளி என்ற சொல்லைக் கூட உச்சரிக்க அருகதையற்றவர்தான் சிறிதரன் – கேடயம் சின்னத்தில் போட்டியிடும் மணியண்ணன் சீற்றம்…

கேடயம் சின்னத்தில் போட்டியிடும் மணியண்ணன் சீற்றம் (photos)

“முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் முன்னாள் போராளிகள் என்ற சொல்லைக் கூட உச்சரிக்க அருகதையற்றவர்.”

– இவ்வாறு முன்னாள் தமிழீழ அரசியல்துறை நிர்வாகப் பொறுப்பாளாரும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் கேடயம் சின்னத்தில் போட்டியிடுகின்ற  வேட்பாளருமான மணியண்ணன் காட்டமாகத் தெரிவித்தார்.

உதயநகர் கிராமத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு அவர் மேலும் தெரிவித்தாவது:-

“போராட்டத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் மிக்க வாழ்வை நாம் பெற வேண்டும். கிளிநொச்சியில் அதற்கான அடித்தளத்தை இட்டு மாற்றத்தை ஏற்படுத்துவோம். அதற்காக நுற்றுக்கணக்கான முன்னாள் போராளிகள் திடசங்கற்பம் பூண்டுள்ளோம்.

எங்களது தியாகத்தையும்,  அர்ப்பணிப்பையும் வைத்து அரசியல் செய்யுவம் இவர்கள் என்றும் முன்னாள் போராளிகளின் நலன்களில்  அவர்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டது கிடையாது.

வாரத்தைக்கு வார்த்தை மாவீரர்களின் தியாகத்தையும், விடுதலைப்புலிகளின் வீரத்தையும்  வைத்து அரசியல் செய்யும் இவர்கள்  ஒரு காலமும் எங்களை மதித்தது கிடையாது. எங்கள் உணர்வுகளைப் புரிந்தது கிடையாது. இதனால்தான் கிளிநொச்சியில் பலநூறு  முன்னாள்  போராளிகள், பொறுப்பாளர்கள் எல்லோரும் சமத்துவக் கட்சியோடு அணிசேர்ந்துள்ளோம்.

சொற்களால் விபரிக்க முடியாத தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் செய்த போராளிகளையும் மக்களையும் வியாபாரப் பொருளாக்கி, போலித்தேசியம் பேசும் அரசியல்வாதிகள் கடந்த பத்தாண்டுகளாக தம்மையும் சுற்றத்தையும் வளப்படுத்திக் கொண்டுள்ளனர். இழப்புக்களைச் சந்தித்த சமூகம் முடிவுறாத அவலத்துக்குள்ளும் துன்பத்துக்குள்ளும் தான் தவிக்கின்றது.

இந்தப் படுபாதக நிலையை மாற்றியமைக்க வேண்டும். இதற்காகக் களத்தில் நின்று செயற்பட்ட முன்னாள் போராளிகள் பல நூறு பேரும் மருத்துவர்களும் ஒன்று சேர்ந்துள்ளோம். இதுகால வரையும் எம்மைத் தமக்குத் தேவையான கச்சாப் பொருளாகப் பாவித்த அரசியல்வாதிகளை நிராகரித்து புதிய தலைமைத்துவத்தை உருவாக்குவோம்.

சுயேட்சைக் குழு -5இல் கேடயம் சின்னத்தில் போட்டியிடும் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக்கட்சியை வெற்றி பெறச் செய்வதன் மூலமாகவே எமது இலக்கினை அடைய முடியும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.