இலங்கையில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் கனடியத் தமிழர் பேரவை அனைத்துத் தமிழர்களையும் புத்திசாலித்தனமாக வாக்களிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கையில் ஜனநாயக உரிமைகளிற்கான தமிழ் மக்களின் போராட்டத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. சுதந்திரத்திற்குப் பின்னர் அவர்கள் எதிர்கொண்ட பல பின்னடைவுகள் இருந்தபோதிலும் நீதி, கண்ணியம் மற்றும் சமத்துவம் குறித்த அவர்களின் விருப்பம் குறையவில்லை. தமிழர்கள் தங்கள் உரிமைகளிற்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய முறைமை பல தசாப்தங்களாக பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வந்துள்ளது.

ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சி  காந்தீய வழிமுறையில் சாத்வீகத்தை அடிப்படையாகக் கொண்டு அரசுடன் ஒத்துழையாமை என்ற திட்டத்துடன் போராட்டத்தை வழிநடத்தியது. தமிழ் மக்களுக்கான உரிமைகளைப் பெறுவதில் மீண்டும் மீண்டும் ஏற்பட்ட தோல்விகளும், ஏமாற்றங்களும், உடன்படிக்கை மீறல்களும், அரச வன்முறைகளும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கான ஆயுதப் போராட்டத்திற்கு வழிவகுத்தது.

தமிழர்களின் வீறுகொண்ட விடுதலைப் போராட்டம், முப்பது ஆண்டுகால உள்நாட்டுப் போராக வடிவெடுத்தது. மே 2009 இல் போர் முடிவடைந்த பின்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு (TNA) சிறிலங்கா  அரசின் நீதியற்ற நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கான தலைமைத்துவத்தை வழங்கியுள்ளதுடன், இராஜதந்திர வழிமுறைகள் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றவும் முயன்று வந்துள்ளது.

கடந்த நாடாளுமன்றத்தில், தமிழ் அரசியல் தலைமை, தெற்கில் உள்ள பிற முற்போக்கான சக்திகளின் ஒத்துழைப்புடனும், சர்வதேச சமூகத்தின் உதவியுடனும், உலகளாவிய மனிதாபிமானக் கோட்பாடுகளின் அடிப்படையில், ஐனநாயகத்தை காக்கவல்ல
ஆணையங்களை உருவாக்கியதன் மூலம், சமத்துவமான சமுதாயத்திற்கான அடித்தளத்தை அமைக்க முயன்றது.

தூரதிர்ஷ்டவசமாக, அவற்றை முன்னோக்கிக் கொண்டு செல்வதிலும், செயற்படுத்துவதிலும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனினும், இந்த சிறிய முன்னோக்கிய நடவடிக்கைகள் தமிழ் மக்களிற்கு ஒரு தற்காலிக சுவாச வெளியை வழங்கியிருந்தாலும், தமிழினத்திற்கு அர்த்தமுள்ள அரசியல் தீர்வை வழங்கப்  போதுமானதாக இருக்கவில்லை.

உலகளாவிய மனிதாபிமானக் கோட்பாடுகளின் அடிப்படையில் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை நடத்த இலங்கையின் கள அரசியல் நிலைமை கடினமான உள்ளது. இலங்கையில் தற்போதைய அரசியல் கலாச்சாரத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால், சட்டத்தின் ஆட்சி இல்லாதது, சமரசத்துக்குள்ளான  நீதித்துறை இல்லாமை, அடிபணிந்த ஊடகச் சூழல் மற்றும் நிர்வாகத்தின் இராணுவமயமாக்கல் ஆகியனவாகும். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் நிலைமைகள் மேலும் மோசமடைவதற்கான வாய்ப்புகளே உள்ளன. இது சிறுபான்மைச் சமூகங்கள் மீதே அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.

இலங்கையில் உள்ள தமிழர்கள் ஓரங்கட்டப்பட்ட சமூகமாக உள்ளார்கள். அவர்களுக்கு குறிப்பிட்ட அரசியல் தேவைகள் மற்றும் அபிலாசைகள் உள்ளன. ஆனால் பாராளுமன்றத்தில் தமிழர்களது வலிமை குறைவாகவே உள்ளது. எனவே, தமிழர்களது வாக்குகளும் வீணடிக்கப்படக் கூடாது என்பது விமர்சன ரீதியாக முக்கியமானது.

தேர்தலில் பங்கேற்காததன் மூலமாகவோ அல்லது சுயாதீனக் குழுக்களிற்கும் தென்னிலங்கை பெரும்பான்மையின கட்சிகளிற்கும் வாக்களிப்பதன் மூலமாகவோ தமிழர்களது வாக்குப்பலம் வீணாகித் தமிழ்ச் சமூகத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பலவீனப்படுத்தப்படும்.

எனவே, வடக்கு மற்றும் கிழக்கு இரண்டிலும் தமிழ்ச் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய ஒரு கொள்கை ரீதியான மற்றும் சக்திவாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது மற்றும் சமூக நலன்களை முன்னேற்றுவதற்கு அவர்களின் கூட்டு வலிமையை திறம்பட பயன்படுத்துவது  எமக்குள்ள தேர்வாக அமைய முடியும். தற்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் தலைமையை வலுப்படுத்துவதன் மூலம் மட்டுமே இந்தக் கூட்டு வலிமையை அடைய முடியும் என்று கனேடியத் தமிழர் பேரவை (CTC) நம்புகிறது.

திரு. இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தையும், மரியாதையையும் பெற்றுள்ளது. தமிழ் மக்களின் கவலைகள், குறைகள் மற்றும் அபிலாசைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவனமாகவும், தொடர்ச்சியாகவும் வெளிப்படுத்தி  வந்துள்ளதென்பது  பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) மிக நெருக்கமாகப் பணியாற்றியுள்ளது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பொருளாதார மேம்பாட்டு முயற்சிகள் குறித்து கனடியத் தமிழர் பேரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளது.

எனவே வடக்கு கிழக்கு வாழ் அனைத்துத் தமிழ் மக்களுக்கும் எங்களது வேண்டுகோள் என்னவென்றால், அவர்களின் விலைமதிப்பற்ற வாக்குகளை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதே!

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.